headlines

img

இதுதான் மோடியின் உத்தரவாதமா?

ஒன்றிய ஆட்சிப்  பொறுப்பில் உள்ள பாஜக மாநில சட்டப் பேரவைகளுக்கு வரும்போது இரட்டை என்ஜின் ஆட்சி வேண்டும் என்று மாய் மாலம் செய்வது வழக்கம். இரட்டை என்ஜின் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மணிப்பூர் மாநிலமே சாட்சி. இந்த லட்சணத்தில்  தலைநகர் தில்லியில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆருடம் போல தன்னுடைய அடங்காத ஆசையை வெளிப் படுத்தியுள்ளார்.

இதில் உச்சபட்ச கொடூரமான நகைச்சுவை என்னவென்றால் ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்தை அவர் கொஞ்சம் கூட கூச்சப் படாமல் தில்லி மாநில தேர்தலிலும் முன் வைத்துள் ளார். இதுவரை அவர் இந்திய மக்களுக்கு அளித்த எந்தவொரு உத்தரவாதத்தையாவது நிறைவேற்றியிருக்கிறாரா?  

2014 மக்களவைத் தேர்தலில் இவரது பரி வாரத்தால் முன்வைக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’ என்பது கிழிந்து தொங்குகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பதில் துவங்கி விவசாயிகளின் விளை பொருளுக்கு உற் பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை என எந்தவொரு வாக்குறுதியையும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் மோடியினால் நிறைவேற்ற முடியவில்லை.

 ஆனால் அம்பானி, அதானி போன்ற கார்ப்ப ரேட் கூட்டாளிகளுக்கு அளவற்ற சலுகைகளை யும், நிகரற்ற மானியங்களையும் அள்ளி வழங்கி னார். தில்லி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு அனைத்தையும் செய்தது ஒன்றிய அரசு. ஆனால் இன்றைக்கு  மாநிலத்திலும் தங்களுடைய ஆட்சி நடந்தால்தான் மக்களுக்கு விமோசனம் என பிரதமர் மோடி பசப்புகிறார்.

நேர்மையான வாக்குறுதிகள் தந்து அதை நிறைவேற்றுவதில் பாஜக ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. தலைநகர் தில்லியிலும் பல்வேறு வகையான தில்லுமுல்லு வேலைகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்ற முயல்வதாக தகவல்கள் வருகின்றன.  ரூ.3 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு தேர்தல் நாளில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாகக்கூறி எளிய மக்களின் விரல்க ளில் அழியாத மையை பாஜகவினர் வைத்துச் செல்வதாகச் செய்திகள் வெளியாகின்றன.

இந்தியாவின் தலைநகர் தில்லியிலேயே இத்தகைய மோசடி வேலைகளில் பாஜகவினர் ஈடுபடுகிறார்கள் என்றால் மற்ற பகுதிகளில் எத்த கைய மோசடியில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பு நாடகங்களை அரங்கேற்றியவர்கள் தான் இவர்கள். பாஜக என்பது நாட்டுக்கு, வீட்டுக்கு கேடு. தில்லி மக்கள் மிகுந்த விழிப்பு ணர்வுடன் வாக்களிப்பது அவசியம்.