சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி முப்படைக்கும் ஒரே தளபதியை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். சமீப காலமாக மத்திய ஆட்சியாளர்களுக்கு எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை, ஒரே சட்டம் என்று கூறி வரும் அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம் என்பதை நோக்கி காய் நகர்த்துகின்றனர். இந்த வரிசையில்தான் பிரதமரின் ஒரே தளபதி என்ற ஆலோசனையும் உள்ளது. தற்போது முப்படைகளுக்கும் தனித்தனியாக தளபதிகள் உள்ள நிலையில், குடியரசுத் தலை வரே முப்படைகளின் தளபதியாக கருதப்படுகி றார். மூன்று படைகளின் தளபதிகளும் ஒரே இடத்தில சந்தித்து பேசுவதற்குக் கூட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த அதிகாரத்தையும், ஒருவர் கையில் தருவது என்பது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. ராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்து உண்டு என்று முன்வைக்கப்படும் விமர்சனத்தை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.
ஜம்மு, காஷ்மீருக்கான 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை நடைமுறைப்படுத்திவிட்டதாக பிரதமர் மோடி தம்பட்டம் அடித்துள்ளார். நாட்டின் சுதந்திர திருநாள் கொண்டாடப்படும் கூட ஜம்மு, காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இல்லை. பாஜக அரசின் இந்த அதீதமான, அராஜகமான நட வடிக்கையால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து அச்சம் நிலவுகிறது. தாங்கள் பழி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், தங்க ளது நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் காஷ்மீர் மக்கள் குமுறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மக்களை இந்திய குடிமக்களாக கருதாமல், மதரீதியில் அணுகி அவர்களை வஞ்சம் தீர்த்துவிட்டது போல பிரதமர் பேசியிருப்பது பொருத்தமான தல்ல.
பிரதமருடைய பேச்சில் வழக்கம்போல புதிய, புதிய அறிவிப்புகள் வாண வேடிக்கை போல நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஊழல், கறுப்புப் பணத்தை சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார். பண மதிப்புழப்பு நடவடிக்கை யை அறிவித்தபோது ஊழலும், கறுப்புப்பணமும் முற்றாக ஒழிக்கப்படும் என்றார் மோடி. ஆனால் அதன் பிறகுதான் கறுப்புப்பண புழக்கம் அதிக ரித்துள்ளது. ரபேல் விமான பேர ஊழல் உட்பட பல்வேறு மேல்மட்ட ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால் ஒவ்வொராண்டும் இதைச் சொல்லியே ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. இந்தியாவினுடைய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆட்டோ மொபைல் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வறுமை, வேலையின்மை போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கிறது. இதுகுறித் தெல்லாம் பிரதமர் பேச்சில் எதுவுமில்லை. இதை திசை திருப்ப வழக்கம் போல ராணுவம் பற்றி பேசி சமாளித்திருக்கிறார் மோடி.