headlines

img

துரித சோதனையா? துரித ஊழலா?

கொரோனா நோய்த் தொற்று,க்கு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப் படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் கூடுதலான அளவில் சோதனைகள் செய்யப்படுவதன் மூலம் தான், இந்த நோய்த் தொற்றின் தீவிரத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 30 அரசு மற்றும் 11 தனியார்  ஆய்வகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் திங்களன்று நிலவரப்படி 94,781 மாதிரிகள் மட்டுமே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 1,937 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 83,021 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும். எனினும் முழுமையாக சோதனை நடத்தப்படுவதன் மூலமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு ரேபிட் கருவி உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது ரேபிட் கருவி சோதனையை உடனடியாக நிறுத்துமாறு ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனைகளில் முரண்பட்ட முடிவுகள் வருவதாக வந்த புகாரையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறத்தில் ரேபிட் கருவி வாங்கி யதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கு ரேபிட் கருவி அளித்த நிறுவனம் 225 ரூபாய்க்கு மட்டுமே விற்பதாகவும் இறக்குமதி செலவு ரூ.20-ஐயும் சேர்த்தால் ரூ.245 மட்டுமே வரும் நிலையில் மாநில அரசு ரூ.600 கொடுத்து வாங்கியிருப்பதன் காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெறாத ஒரு இடைத் தரகு நிறுவனம் மூலம் அதிக விலைக்கு வாங்க ஆர்டர் கொடுத்தது ஏன் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தப் புகாருக்கு பதிலளித்துள்ள மாநில சுகா தாரத்துறை அமைச்சர், தமிழக அரசு வாங்கிய 24,000 ரேபிட் சோதனைக் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதாகவும் இதனால் தமிழக அர சுக்கு எந்த ஒரு செலவீனமும் இல்லையென்று கூறியுள்ளார். மற்ற மாநிலங்களிலும் கூடுத லான விலை கொடுத்தே இந்தக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இது பொருத்தமான பதில் அல்ல.

மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுவது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தரமற்ற மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்கப்படுவதாகவும் இந்த விஷயத்தில் பெரும் தொகை கைமாறுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.

கொரோனா பீதியால் மாநிலமே கதிகலங்கி நிற்கும் நிலையில், இத்தகைய ஒரு முறைகேடு நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த விஷயத்தில் மடியில் கனம் இல்லையென்றால் வெளிப்படையான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடவேண்டும். இதுவரை நடந்த மருத்துவக்கருவிகள் கொள்முதல் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். 

அதே நேரத்தில் மத்திய அரசு தலையிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான கொள்முதலை நாங்கள் தான் செய்துதருவோம். மாநிலங்கள் நேரடியாக செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே ரேபிட் சோதனைக் கருவிகள் விஷயத்தில் நடந்தது என்ன; தரமற்ற சோதனைக் கருவிகளை அதிகவிலைக்கு வாங்கியது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்.