headlines

img

வளங்களை அழிப்பவர்களை ஆள விடலாமா

காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களையும், இப்பகுதி நிலப்பரப்பு முழுவதையும் அதில் வசித்து வரும் மக்களையும் நாசப்படுத்திடும் திட்டங்களை செயல்படுத்திட மோடி அரசுமுடிவு செய்துள்ளது. அதை அப்படியே அமல்படுத்திட தமிழக எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரைநிலப்பரப்பில் 731 சதுர கி.மீ; மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1794 சதுர.கி.மீ கடல்பகுதியும்; பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 2674 சதுர.கி.மீ கடல்பகுதியும்; திருவாரூர்மாவட்டம் திருக்கராவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 431 சதுர.கி.மீட்டர் நிலப்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு போட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எனும்ஒற்றை உரிமத்தை பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு துளையிட்டு அதன்பக்கவாட்டிலும் துளையிட்டு ஹைட்ராலிக் பொருட்கள் நிரம்பிய தண்ணீரை செலுத்தி, பாறைகளை உடைத்து அதன் கீழ் உள்ள மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற எரிவாயுக்களை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் காவிரிடெல்டாவில் உள்ள பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள்பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசடைந்து மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றப்படும், கடல் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் மீன்வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். கடல் பகுதியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு கடல்சீற்றம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அடிக்கடி ஏற்படும் பகுதியாக மாற்றப்படும். எனவே, மண்ணையும், மக்களையும், கடலையும் பாதுகாக்கமோடி, எடப்பாடி கூட்டணியை முறியடிக்க ஒன்றிணைவோம். -சாமி.நடராஜன்