தருமபுரி:
தஞ்சை மண்ணில்தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டி ஒடுக்கப்பட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிய மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30 திங்களன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மூன்று போராட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.
தருமபுரி
தருமபுரி வட்டம் உங்கராண அள்ளி கிராமத்தில் புல எண். 65-ல் 2.59 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர் நலத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு, 78 பயனாளிகளுக்கு 2011-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி இலவச மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு மனையை அளந்து காட்டாமல் சம்பந்தப்பட்ட துறை காலம் தாழ்த்தி வந்தது.இதனையடுத்து, மனைப் பட்டாவை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலதாமதம் ஏற்பட்ட நிலையில், 2017-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுத்து முறையிடப்பட்டது. அதன்படி, கோட்டாட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கருந்து வந்தது. இந்நிலையை பயன்படுத்தி, தனிநபர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதனையடுத்து, தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிலமீட்பு போராட்டத்தை அறிவித்தது. செப்டம்பர் 30 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன், பொருளாளர் கே.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார்,ஒன்றியச் செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்புசாமி, காரிமங்கலம் பி.ஜெயராமன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டதலைவர் சோ.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் சி.நாகராஜன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பண்ணியாண்டிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜி.சம்பத், ஆதிதமிழர் விடுதலை கழகம் தலைவர் கே.சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் வி.பி.சாமிநாதன், பி.சங்கு, மாரியப்பன், மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வட்டாட்சியர் அன்பு, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் காவல்துறையினர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை மீட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமனைப் பட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தோப்பூர் பகுதியில் நத்தமாக உள்ள ஊராட்சி தலைவர் சத்தியமங்கலம் என்ற பெயரில் நத்தமாக உள்ள நிலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்துகோபிசெட்டிபாளையம் வரை நடைபயண மாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் இந்த பகுதிகளை பார்வையிட்டு இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். ஆனால் இதுவரை இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.எனவே இந்த ஆண்டு தோப்பூர் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கேட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின்போது, வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில், தோப்பூர் பகுதியில் உள்ள 200 பயனாளிகளுக்கு ஒரு வாரத்தில் ஆட்சியரிடம் என்ஓசி சான்று பெற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தனி வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உறுதி அளித்தனர். போராட்டத்தில் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகவள்ளி, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். சசி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா தலைவர் சத்தியமூர்த்தி, தாலுகா செயலாளர் ரங்கசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, சிஐடியு சங்கத்தின் நிர்வாகி மாரப்பன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையை அடுத்த கடப்பன்குட்டை பகுதியில், பழங்குடியினருக்காக சுமார் 10 ஏக்கர் பஞ்சமி நிலம், இருளர் இன மக்களான ஏழுமலை, ராமன், சின்னதுரை ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்களான வெங்கட்ராமன் உள்ளிட்ட நபர்கள் மோசடி செய்து நிலத்தை அபகரிப்பு செய்துள்ளனர்.மேலும், தங்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு பழங்குடி இருளர் இன மக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முறையிட்டுள்ளனர். அந்த முறையீட்டின் அடிப்படையில், இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு அளித்தது. ஆனால் நில ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை வெளியே வரவிடாமல் தடுத்து மிரட்டி வைத்திருந்தனர். இதனால் செப்டம்பர் 30 அன்று மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையில், ‘நிலம் எங்களின் உரிமை’ என்ற முழக்கத்தோடு, நில மீட்பு இயக்கத்தினை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது. பழங்குடி இருளர் இன மக்களுக்கு உரிமையான பஞ்சமி நிலத்தை மீட்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தீஒமு மாநில துணைத் தலைவருமாக எஸ்.கே.மகேந்திரன், மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் மேல் செங்கம் போலீசார், தண்டராம்பட்டு வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் காளிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில், இருளர் இன மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள வெங்கட்ராமனிடமிருந்து வரும் 15 நாட்களுக்குள் மீட்டு நில உரிமையாளர்களான பஞ்சமர்களிடமே ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை அளித்தார். இதையடுத்து, நில மீட்பு போராட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.இதில், தீஒமு நிர்வாகிகள் எஸ்,ராமதாஸ், எம்.ரவி, வழக்கறிஞர் எஸ்.அபிரமான், சிஐடியு ஆர்.பாரி, விதொச எம்.பிரகலநாதன், விச வி.சுப்பிரமணி, வாலிபர் சங்கம் என்.அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.