headlines

img

யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஒரு மறு வாசிப்பு

இது மறுவாசிப்புகளின் காலம். கடவுளின் கதைகள் துவங்கி கடையில் கிடைக்கும் குண்டூசி வரைக்கும் எதனையும் புனிதப்படுத்த வேண்டியதில்லை. அனைத்தையும் கேள்விக் குள்ளாக்கி, தெளிவடையும் இக்காலத்தின் மறுவாசிப்பு முயற்சிகளுக்கு சங்க இலக்கியங்களும் தப்பவில்லை. வர்க்கப் பார்வையில், தலித்தியக் கண்ணோட்டத்தில், மொழியியல் அறிவில், இனவரைவியல் கோட்பாட்டில், மானுடவியல் வளர்ச்சியில்.  என்று சங்க இலக்கியங்கள் பன்முகத்தன்மையோடு இக்காலத்தில் மறு வாசிப்பு செய்யப்பட்டு வருகின்றன.  தமிழ், தமிழர் என்று சொன்னவுடனேயே திருக்குறளின் புகழ்பெற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகளையும் முன்னிலைப் படுத்துவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் வழக்கமாக இருக்கிறது. உலக அளவிலேயே தமிழின் அடையாளமாக “யாதும்ஊரே “ எனத் தொடங்கும் புற நானூற்று வரிகள் பேசப்பட்டு வருகின்றன. சில உலகத் தமிழ் மாநாட்டின் பதாகைகளை யும், உள்ளடக்கங்களையுமே இந்த வரிகள் தீர்மானித்தன. தமிழ் மக்களின் தனித்தன்மை குறித்து கட்டுரை எழுதும் பெரும்பாலோர் இதனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. வைதீக தாக்கத்தால் மனிதர்கள் பல்வேறு சாதி அடுக்குகளாகப் பார்க்கப்பட்டு பிளவுகள் முன்னின்ற போது, அதற்கு எதிராக, அனை வரும் ஒன்றே என்று கூறும் சங்க இலக்கிய வரிகளை முன்னிலைப் படுத்தியதை பொது வாகப் புரிந்து கொள்ள முடியும்.   உண்மையில் ”யாதும்ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடல் தமிழின் முற்போக்கு முகம்தானா? அது இவ்வளவு தூரம் தமிழர்களின் அடையாளமாக, பெருமையாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய அளவுக்கு சரியானதுதானா.. ? முதலில் அந்தப் பாடலின் வரிகளை முழுமை யாகப் பார்த்து விடலாம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர்                     அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!                 முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல்                    பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,                    மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும்                     இலமே!
- கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)

இதனை நாம் வாசிக்கும் போதே பெரும் பாலான சொற்கள் புரிந்து விடும். ஆனாலும், இப்பாடலின் பொருளாக தமிழறிஞர்கள் சொல்வது என்ன? என்பதையும் பார்த்து விடலாம். 

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினர்
நன்மையும்  தீமையும் அடுத்தவரால்                 வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர்                 தருவதில்லை
சாதல் புதுமையில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை
வாழ்வு துன்பமென வெறுத்து                     ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும்                       இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும்                     இல்லை.
 

 சாதாரணமாகப் பார்க்கும் போது உலக மக்கள் அனைவரையும் உறவினர்கள் என்ப தும், எல்லா ஊர்களும் நம்முடையதுதான் என்பதும் உலக மக்களின் பேதங்களைக் களைகிற வரிகள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த மனநிலையை வெளிப்படுத்திய கோட்பாடு என்ன? என்பதை அடுத்தடுத்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.  மனிதர்கள் அனைவரும் உறவினர்கள் எனும் மனநிலை மனிதாபிமானத்தில் இருந்து முன்வைக்கப்படவில்லை. மாறாக, இந்த உலகம் விதிப்படிதான் இயங்கும் என்ற மாறாக் கோட்பாட்டிலிருந்து பிறந்திருக்கிறது.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதும், ஆற்று நீர் வழி ஓடும் தெப்பம் போல என்பதும் இப்படலின் மையப்பகுதியை வெளிப்படுத்து கின்றன. விதிக் கோட்பாடு பற்றியும், அதன் பின்னணியில் இருந்த சமயக் கருத்தாக்கத்தை யும் புரிந்து கொள்ள பல்சமய ஆய்வு அவசிய மாகிறது.  அக்காலத்தில் நாடு முழுவதும் இருந்த பல வகை நெறிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று – வைதீகக் கருத்தியலின் அடிப்படையில் சாங்கியம், யோகம், மீமாம்சம், வைசேடிகம், வேதாந்தம், நியாயம் போன்ற சமயக் கோட்பாடுகள். இரண்டு - இந்த வைதீகக் கருத்திற்கு எதிரான சமயங்க ளாக நான்கு பிரிவுகளைக் குறிப்பிடலாம். உலகாயதம், ஆசீவகம், பௌத்தம், சமணம் என்று அழைக்கப்படும் ஜைனம். இதில் உலகாயதம் என்பது பொருள்முதல்வாதம் என்பது அதன் பெயரிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. மற்ற சமயக் கோட்பாடுகளில் ஆசீவகம், ஜைனம், பௌத்தம் ஆகிய மூன்றும் வைதீகத்திற்கு நேரெதிரானவை. இவற்றை அவைதீகச் சமயங்கள் என்று வரலாற்றாளர்கள் அழைக்கிறார்கள். ஸ்ரமணர் என்பதில் இருந்து உருவான சமணர் என்ற சொல் இம்மூன்று கோட்பாடுகளையும்  குறிக்கும் பொதுச்சொல்லாகும். இது பிற்காலத்தில் ஜைனர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக  பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆசீவகம், புத்தம், ஜைனம் ஆகிய சமயங்கள் - வைதீகம் முன்வைக்கும் உலகைப் படைத்தது ஏகக் கடவுள் என்று கருத்தினை யும், பிறப்பினால் கற்பிக்கப்படும் பேதங்க ளையும், யாக, வேள்வி வழிபாட்டினையும் மறுக்கின்றன. ஆனால், ஊழ்வினை மற்றும் மறுபிறப்புக் கொள்கைகள் இம்மூன்று சமயங்களிலும் வெவ்வேறு வகைகளில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜைனத்திற்கும் – ஆசீவ கத்திற்கும் ஒற்றுமைகள் அதிகம். ஆனாலும், மிக முக்கியமான கோட்பாட்டில் இரண்டு சமயங்களும் வேறுபடுகின்றன. ஜைன சமயம் மனிதனின் முயற்சியால் வீடு பேறு அடைய முடியும் என்ற கருத்தினையும், ஆசீவகம் மனித முயற்சி பலனற்றது, இயற்கையின் போக்கில் அனைத்தும் இயங்கும்  என்ற கருத்தினையும் கூறுகின்றன.  “இந்த உலகம் மாற்றமில்லாத நிலைத்தன்மை கொண்டது. அதனை மனித முயற்சியால் மாற்ற முடியாது” என்று கூறும் அவிசலித நித்யத்வம் எனும் சசஸ்தவாதம் ஆசீவகத்தில் மட்டுமே உள்ளது. யாதும் ஊரே பாடலில் முன்வைக்கப்படும் மனித முயற்சிகளை புறக்கணிக்கும் கோட்பாடு ஆசீவகத்தின் கருத்தியலாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ர.விஜயலட்சுமி, முனைவர்.க.நெடுஞ்செழி யன், ஆய்வாளர் ஆதி சங்கரன் , தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசன் ஆகியோர் புறநானூற்றின் இப்பாடல் வரிகள் ஆசீவக சமயத்தின் கோட்பாடே என்று உறுதிபடக் கூறுகின்றனர். ஆசீவக சமயம் குறித்த செய்திகள் அசோக வதனம், திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, பெரிய புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி ஆகிய நூல்களில் காணக்கிடைக்கின்றன. ஆசீவக மரபினை உருவாக்கியதாகக் கருதப்படும் மற்கலி கோசலரும், ஜைனத்தை உருவாக்கிய மகா வீரரும் ஒரே காலத்தவர்கள். இருவரும் ஒன்றாகவே தவத்தில் ஈடுபட்டதாகவும், கருத்து வேற்றுமையால் மற்கலி கோசலர் ஆசீவக சமயத்தை உருவாக்கியதாகவும் ஜைனர்க ளின் புனித நூலான அங்க சூத்திரம் பதிவு செய்துள்ளது. மற்கலி கோசலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆசீவகத்தின் துவக்கம் தமிழகமே என்றும் கூறுகிறார் முனைவர் க.நெடுஞ்செழியன். இது ஆய்வுக்குரியது. அசோகரின் தந்தை பிந்துசாரரின் அரசவையில் ஜராசனா எனும் ஆசீவகர் இருந்த தற்கான ஆதாரங்களும், அசோகர், நாகர்ஜூனி குகையையும் – பராபர் குகையையும் ஆசீவகர்களுக்கு அர்ப்பணித்த செய்திகளும் ஆசீவக சமயத்தின் இருப்பினை உறுதி செய்கின்றன. மௌரியர் காலத்தில்தான் ஆசீவகம் இலங்கையில் பரவியதாக மகாவம்ச நூல் பதிவு செய்துள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் ஏழாவது ஸ்தூபி கல்வெட்டும் ஆசீவகம் செல்வாக்கு மிகுந்த சமயமாக இருந்ததைப் பதிவு செய்கிறது. தென்னிந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம், ஆந்தி ரப் பகுதிகளிலும் ஆசீவகம் பரவியிருந்த தாகவும் முனைவர் பாஸ்யம் குறிப்பிடுகிறார்.  யாதும் ஊரே பாடலினை எழுதியவர் கணியன் பூங்குன்றனார். கணியன் என்ற சொல் வானியலைக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பவர்களைக் குறிக்கிறது என்பதில் தமிழ றிஞர்கள் பெரும்பாலோர் உடன்படுகின்றனர். ஆசீவகர்கள் கோள்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை பல வடமொழி நூல்கள் அழுத்தமகாகக் குறிப்பிடுகின்றன.  தமிழ்நாட்டில் கணியன் பூங்குன்றனார் மட்டுமல்ல.  பக்குடுக்கை நண்கணியனார், பிசிராந்தையார் ஆகிய சங்கப் புலவர்களும் ஆசீவகர்கள்தான். கோப்பெருஞ்சோழன் மற்றும் கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆகியோரும் ஆசீவகர்களே.  கண்ணகியின் மறைவிற்குப் பிறகு அவளுடைய தந்தை மாநாய்கண் ஆசீவகத் துறவியானதை சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டம் நீர்படு காதை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

கண்ணகி தந்தை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும். 
                (97-100)  
ஆசீவக சமயத்தின் மூல நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனினும், அதன் கோட்பாடுகளை பல தமிழ் இலக்கிய நூல்க ளின் மூலமும், வட மொழி நூல்களின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போல, ஆசீவகத்தின் இருப்பினையும் பரவலையும் பல கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தின் அய்யனார் வழிபாடு ஆசீவக சமயம் சார்ந்ததே. சபரிமலை அய்யப்பன் ஆசீவகத்தின் அறப்பெயர்சாத்தன் (தர்ம சாஸ்தா) என்னும் கருத்தினை முன்வைக்கிறார் முனைவர்.க.நெடுஞ்செழியன். தமிழகக் கோயில்களில்  எங்கெல்லாம் யானையை முதலை விழுங்குவது போன்ற சிற்பமும், சிங்கம் தாக்குவது போன்ற சிற்பங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் ஆசீவகத் தலங்களாக இருந்தவை என்றும் அவர் கூறுகிறார்.  யானையை முதலை விழுங்குவதும், சிங்கம் தாக்குவதும், கோயில்களில் நவக்கிரக சிற்பங்கள் வெளியில் வைக்கப்படுவதும் ஆசீவகத்தை வெற்றி கொண்ட சமய வரலாற்றினைப் பறை சாற்றுவதாகப் பதிவு செய்கிறார் ஆய்வாளர் செந்தீ நடராசன். ஆசீவக சமயத்தின் கோட்பாடான இயற்கை மாறாக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கணியன் பூங்குன்றனாரின் ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” எனும் வரிகள் பிறந்துள்ளன. மனுதர்மம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை முன்வைப்பதற்கு மாற்றாக, “யாதும்ஊரே” என்று நாம் சொல்வதில் தவறில்லை. ஆனால், ஒவ்வொரு வரிக ளுக்குப் பின்பும் அது சார்ந்த அரசியல் கோட்பாடு வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து  முன்வைப்பது சிறந்தது.