headlines

img

உலகத்தின் பொதுமொழி சினிமா...

“ஒரு திரைப்படத்தின் இயக்குநர் யாரை இயக்குகிறார்? திரைப்பட நடிகர்களை,  இசையமைப்பாளரை,  நடனம் பயிற்றுநரை, சண்டைப் பயிற்சியாளரை... என அடுக்கிக் கொண்டே போய் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடும் அனைவரையும் இயக்குபவர் இயக்குநர் என்பார்கள். ஆனால் உண்மையான இயக்குநர் திரைப்படம் பார்க்கின்ற பார்வையாளர்களை, ரசிகர்களைத்தான் இயக்குகிறார். 

காலத்தை வென்று சில படங்கள் பேசப்படுகின்றன என்பதன் பொருள் என்ன?  தலைமுறைகள் மாறினாலும் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் பார்வையாளர்களின் மனங்களை இயக்கி இருக்கிறார் என்பதுதான்.” 
சினிமாவின் மொழி குறித்து புதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழாவில் இயக்குநர் எம். சிவகுமார் பேச்சின் பகுதிதான் இது.  இந்த விழாவின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 22) திரையிடப்பட்ட ‘மீனா’ குறும்படத்தை இதற்கொரு சிறு எடுத்துக்காட்டாக அவர் கூறினார்.

வீட்டு வேலை செய்யும் இளம்பெண் மீனா. அவளது இரண்டு தோழிகள்.  குடிசைப்பகுதியில் வாழும் இவர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.  ரயில்பாதை அருகே தான் ஒதுங்க வேண்டும்.  ரயில் வரும்போது டக்கென எழுந்து கொள்வார்கள். மீனா  வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் ஒருநாள் அவசர வேலையாக வெளியூர் செல்கிறார்.  வீட்டு சாவி வாட்ச்மேனிடம் இருக்கிறது. இதுதான் வாய்ப்பு என்று சாவியை வாங்கி வீட்டுக்குள் சென்று கழிப்பறையில் அமர்ந்து மலம் கழிக்கிறாள் மீனா. அந்த வீட்டின் அருகே ரயில் ஓடும் சத்தம் கேட்க தன்னுணர்வு இல்லாமல் டக்கென கழிப்பறையிலிருந்து எழுந்து கொள்கிறாள். இயக்குநரைப்  பாராட்டும் விதமாகப் பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் கிடைக்கிறது. கக்கூஸ் பிரச்சனை இருக்கும்வரை இந்தக்காட்சிக்குப் பார்வையாளர்களிடம் வரவேற்பு இருக்கும்.  இங்கேதான்  இயக்குநர் பார்வையாளர்களை இயக்கியிருக்கிறார். மீனா குறும்படத்தின் பிராக்டிகல் காட்சி சிவகுமாரின் தியரிக்கு விளக்கமாக அமைந்தது. 
“ஆவணப் படம் எடுப்பவர்கள் சிலர் ஒரே மாதிரி காட்சிகளை அமைக்கிறார்கள். சிறு சிறு விளக்கம்.  அடுத்தடுத்து பேட்டி என்பது போல் அமைகிறது.  ஆவணப்படம் என்பது கட்டுரை போல் இருக்க வேண்டியதில்லை.  கதையம்சமும் அதில் இருந்தால்தான் ஈர்ப்பாக இருக்கும். சொல்லப்போனால் கட்டுரை கூட கதை சொல்வது போன்று இருந்தால் படிப்போரை ஈர்க்கும்” என்று இன்னொரு வகைமைக்கு அவர் தியரியை முன்வைத்தார். 

அடுத்து திரையிடப்பட்ட படமே இதற்குப் பிராக்டிகல்போல் அமைந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி வெங்கடபதி ரெட்டியார் பற்றியது அந்த ஆவணப்படம்.  வேளாண்மையில் புதுமை செய்து, அறிவியல் ஆராய்ச்சிக்காகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் வெங்கடபதி ரெட்டியார். ஆனால் இந்த ஆவணப்படம் தொடங்குவது இப்படித்தான்.... “சின்ன வயசுல எனக்கு படிப்பு வரல. பள்ளிக்கூடம் போறேன்னு சொல்லிட்டு  ஊர் சுத்திட்டு வீட்டுக்கு வந்துடுவேன். அதனால நாலாங்கிளாசோட  நிறுத்திட்டாங்க.” 

யதில் எண்பது மதிக்கத்தக்க  அவரின் மொழியே பார்வையாளர்களைக் கவர்கிறது.  அடுத்த காட்சிக்குப் போகும்போது, “எனக்கும் வயசு ஆயிட்டே இருந்துது. கல்யாணம் பண்ணி வச்சாலாவது உருப்படுவேன்னு  கல்யாணம் பண்ணி வச்சாங்க.  அப்பவும் நான் திருந்தறதா தெரியல.  அதனால மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” என்பது  சுவாரசியமான,  இயல்பான,  எளிதான  மனதில் பதிகின்ற நெரேஷன் (தொகுப்பு). 

ஆனால் படம் முழுக்க தோட்டக்கலை, விவசாயம் பற்றிதான்.  கனகாம்பரம் பூவில் 500 வகைகளை உருவாக்கியவர்;  மின்சார உற்பத்திக்கு ஏற்ப சவுக்கு மர வகைமையைக் கண்டுபிடித்தவர்; கொய்யாவில் சிவப்பு சதைப்பற்றுள்ள வகையை  உருவாக்கியவர். அறிவியல் கருத்துக்களைச் சொல்லும் போதே,  அலுப்பு தட்டாமல் இடையில் வரும்  உரையாடல்களால் அவர் கலகலப்பூட்டுகிறார். கனகாம்பரம் பூவில் வெரைட்டி உருவாக்க கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.  இதற்கு மனைவியின் நகை பயன்படுகிறது.  ஆனால் அதை அவர் வெளிப்படுத்தும் விதம்தான் சிறப்பு. “எங்க வீடலியே என்  மனைவி நகையைத் திருடி அடகு வச்சேன்” என்று கூறும்போது படம் பார்ப்பவர்கள்  ரிலாக்ஸ் ஆகிறார்கள்.  ஆவணப்படத்தை இப்படியும் எடுக்கலாம் என்பதற்கு இது உதாரணமாக இருந்தது. 

ஆவணப் படத்தின் இறுதியில் வெங்கடபதி ரெட்டியாரின் மகள் லட்சுமியின் உரையாடல் மகுடமாகிறது. “எந்தத் தொழில் அழிந்து போனாலும் சரி செய்து மீண்டு வந்து விடலாம். ஆனால் விவசாயத் தொழில் அழிந்து போனால்  உலகமே அழிந்து போகும் . அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது.” மறுக்க முடியாததாகவும் மறக்க முடியாததாகவும் இந்த ஆவணப்படம் நிறைவுபெற்றது. மீண்டும் இயக்குநர் சிவகுமாரின் பாடத்திற்கு வரலாம். “ திரைப்படம் ஆரம்பத்தில் ஆவணப்படம் போலத்தான் இருந்தது. எப்போது ‘கட்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்டதோ ,  அப்போது சினிமாவுக்கான மொழி வேறு பரிமாணத்தைப் பெற்றது.  ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையேயான இன்சர்ட் (உள் நுழைப்பு) பார்வையாளர்களுக்குப் பல செய்திகளைக் குறிப்பால் உணர்த்துகிறது” என்று கூறிய சிவகுமார் ஒரு உதாரணத்தையும் கூறினார். 

“இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒருவர் இன்னொருவரைத் தகுதிக்கு மீறி புகழ்ந்து கொண்டிருக்கிறார்.  இடையே ஒரு பெண்ணின் குளோசப் வருகிறது.  அந்த முகத்தில் ஏளனப் பார்வை  தெரிகிறது. இதன் மூலம் புகழப்படுபவர் அதற்குத் தகுதியற்றவர் என்பது உணர்த்தப்படுகிறது.வேறு வேறு நிலைகளில்  எடுக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்படும் போது புதிய பரிமாணம் கிடைக்கிறது” என்று சிவகுமார் விளக்கம் அளித்தது ஆரம்பநிலை மாணவர்களுக்குப் பயன்படும். 
ஆவணப்பட விளக்கத்திற்கு இடையே ஒரு ஆவணப் படத்தின் காட்சிகளைக் காண்பித்து புதிய செய்தியையும் அவர் பகிர்ந்துகொண்டார்.  ஆஸ்திரேலியாவில் வீடுகளுக்கு பூட்டு போடுவது இல்லை என்ற செய்திதான் அது. அந்த ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தும் இயக்குநர்,  ஒரு பெண்ணை சந்தித்து பேட்டி காண்கிறார்; ஒரு பெரியவரையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளுக்காக அவர் எந்த வீட்டுக் கதவையும் தட்டி,  தாழ்ப்பாளை திறந்தபின் அனுமதியோடு உள்ளே செல்லவில்லை. நேரடியாகவே கதவைத் திறந்து செல்வதன் மூலம் வீட்டின் கதவுகள் பூட்டப்படு வதில்லை என்பது மட்டுமின்றி உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்வதும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார். “வீட்டுக்குப்  பூட்டு போடுவது நம்மை நாமே சிறையில் அடைத்துக் கொள்வது போல” என்றும் “பூட்டு என்பது அண்டை வீட்டுக்காரரை சந்தேகப்பட்டு அச்சம் கொண்டிருப்பது” என்றும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வியப்பைத் தருகின்றன. 

 தமது பேச்சுக்கிடையே  இயக்குநர் சிவகுமார்  திரை உலகத்திற்கும், தமுஎகச - வுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். “வரும் மே மாதம் இரண்டாம் தேதி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேயின் நூற்றாண்டு. இதனை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்”  என்பதுதான் அந்த வேண்டுகோள்.   

தொகுப்பு : மயிலைபாலு