headlines

img

வாய்மை - கோவி.பால.முருகு

வாய்மை எனப்படுவது எதுவெனின் பிறரை
   வாட்டும் சொற்களைச் சொல்லா திருத்தல் 
பொய்மைச் சொல்லும் வாய்மை ஆகிடும்
   போற்றும் நன்மை தந்திடு மானால்!

தன்நெஞ் சறியவே பொய்யைப் பேசினால் 
  தன்னையே வருத்தும் சொல்பவர் நெஞ்சு!
தன்னெஞ் சறியபொய் பேசா திருப்பின்
 தகுதியால் உலகோர் உள்ள  மிருப்பான்!

மனத்தொடு பொருந்த உண்மை பேசுவோர்
  மாதவம், தான முடையரின் பெரியார்!
மனதில் பொய்யிலா வாழ்வே புகழ்தரும்!
  மற்றது கொடுக்கும் அறமெலாம் அவர்க்கு!

பொய்யா அறத்தைப்  போற்றி வாழ்வார் 
  பொய்யா அறம்பலச் செய்தலும் நல்லது!
மெய்யது   நீரால்    மேவிடும் தூய்மை!
  மேன்மை  அகதில்  வாய்ம . தூய்மை!

புறவிருள் நீக்கும் விளக்கெலாம் விளக்கல
  அகவிருள் நீக்கிடும் வாய்மை விளக்காம்!
சிறந்த   வாய்மை  சொல்லைத் தவிர
  சிறப்பு மற்றிங்  கில்லவே இல்லை!

வாய்மை என்பதும் உண்மை என்பதும்
  வாய்த்திடும் பொருளில் வேறு வேறாகும்!
வாய்மை  என்பதில்  பொய்மை  சேரும்!
  உண்மை  வாய்மை ஒன்றுதல்  ஆகா!