குறள்நெறிப் பாடல்
தன்னுடல் வளர்க்கப் பிறவுயிர் தின்போன்
தன்னிடம் இரக்கம் தள்ளியே நிற்கும்!
மண்ணிடைப் பொருளைக் காத்தலே சிறப்பு
மனதிடைப் புலாலை மறத்தலே சிறக்கும்!
படையின் கருவியும் புலாலின் சுவையும்
பயன்படுத் திடுவோர் அருள்பெறல் அரிது!
விடைகொடு கொலைக்கு விலகியே நின்றிடு
விளையும் அருளே உன்னுள் பெரிது!
உயிர்களை உணவாய்க் கொள்பவர் உயரார்
உண்ணா நிலையால் உயிர்கள் நிலைக்கும்!
உயிர்களைக் கொல்பவர் உணர்ந்து நிறுத்தின்
ஊனினை விலைக்கு விற்பதைத் தொலைக்கும்!
வேறோர் உயிரின் உடலின் புண்ணை
வேண்டா திருக்கும் விரதம் வேண்டும்!
வேறோர் உயிரை விரும்பிப் பறித்தே
ஊனை உண்ணல் குற்றம் யாண்டும்!
வேள்விகள் செய்து வேண்டலை விடவும்
உண்ணிட உயிர்களைக் கொல்லா திருந்திடு!
கொல்லான் புலாலை உண்ணான் அவனை
கூப்பித் தொழுதிடும் உயிர்கள் அறிந்திடு!
உயிர்கள் எல்லாம் ஒன்றென நோக்கு
உயர்வு தாழ்வை அதனுள் நீக்கு!
உயர்ந்தது பசுவெனும் ஒற்றைப் பேச்சு
உளுத்தரின் மதவெறி அதனைப் போக்கு!