என்ன செய்யப் போகிறீர்கள், மோடி அரசே!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள ‘ரஷ்யா மீதான தடைகள் சட்டம் 2025’ என்பது உலக வர்த்தக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகும். ஒரு நாட்டின் இறையாண்மையையும், அதன் மக்க ளின் பொருளாதாரத் தேவையையும் கிள்ளுக் கீரையாகக் கருதும் வாஷிங்டனின் இந்த மேலா திக்கப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மூலம் முன்வைக்கப் பட்டுள்ள இந்த 500 சதவீத வரி மிரட்டல், நட்பு நாடுகள் என்று சொல்லிக் கொண்டாலும் கூட, அதை ஒரு எஜமானன் - பணியாள் உறவாக மாற்ற முற்படுகிறது. இந்தியா தனது எரிசக்தித் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு. மலிவு விலையில் கிடைக்கும் எரிபொருள் என்பது இங்குள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்களின் போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கிறது. இதனை உணராமல் அல்லது உணர மறுத்து, “என்னை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் இந்தியா வின் கடமை” என்ற ரீதியில் டிரம்ப் பேசுவது அப்பட்டமான மிரட்டலின் உச்சம் மட்டுமல்ல, அது ஒரு தற்சார்பு தேசத்தின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலுமாகும்.
ஏற்கனவே இந்திய ஏற்றுமதிகள் மீது 50 சதவீத வரிச்சுமையை ஏற்றிவிட்டு, இப்போது 500 சதவீத வரி விதிப்போம் என்று மிரட்டுவது இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை ஒடிக்க நினைக்கும் கொடூரமான பொருளா தாரப் பயங்கரவாதம். ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் பிற கனிமங்களை அமெரிக்காவே தனது தேவைக்காக மறைமுக மாக வாங்கிக் கொள்ளும் போது, இந்தியா மட்டும் தனது தேவைக்காக ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் தடுப்பது கேடு கெட்ட இரட்டை வேடம். அமெரிக்காவின் இந்த வரிப் பயங்கர வாதம் சர்வதேசச் சந்தையில் டாலரின் செல்வாக்கைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு புதிய உலகப் பொருளாதாரக் கூட்டணியை உருவாக்க வழிவகுக்கும்; அது நிச்சயம் நடக்க வேண்டும்.
வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமர்ந்துகொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை யாரும் தீர்மானிக்க முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் உணர வேண்டும். நமது தேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்கு அடகு வைப்பது தற்கொலைக்குச் சமம். “இந்தியா ஃபர்ஸ்ட்” என்ற கொள்கையோடு, எந்த மிரட்ட லுக்கும் பணியாமல் ரஷ்யாவுடனான வர்த்த கத்தை ரூபாய்-ரூபிள் முறையில் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அமெரிக்கா தனது வர்த்தகப் போரை இந்தியா மீது திணித்தால், பதிலுக்கு அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் பெருநிறு வனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா தயங்கக் கூடாது. நட்பென்பது சமமான மரியாதையில் நிலைக்க வேண்டுமே தவிர, ஒரு நாட்டின் கழுத்தை நெரித்து அடிபணிய வைப்பதில் இல்லை என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிரட்டல் களுக்கு இந்தியா உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இது.
