மோடி அரசின் நிர்வாகத் தோல்வியும் தொழிலாளர்களின் கண்ணீரும்
மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டில் சமையல் எரிவாயு விநியோகச் சங்கிலி முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ள நிலை யில், ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என மோடி அரசு பாடும் மாய்மாலப் பாட்டுக்கும், யதார்த்த நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. தில்லி போன்ற பெருநகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப் பாட்டால் உணவகங்கள் மூடப்படுவதும், வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதும் மோடி அரசின் இராஜதந்திர மற்றும் நிர்வாகத் தோல்வியின் உச்சமாகும்.
தில்லி அரசு நாள்தோறும் 1,14,679 சிலிண் டர்கள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், 1,31,335 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்களை அடுக்கி வருகிறது. ஆனால், 90,000 டன் தினசரித் தேவையைக் கொண்ட ஒரு நாட்டில், ஈரானின் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஒரு சில கப்பல்கள் கொண்டு வரும் 20,000 டன் எரிவாயு என்பது யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றதே. ஒரு சிலிண்டர் கிடைப்பதற்குச் சராசரியாக 4.24 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. அரசின் இந்தக் கண்துடைப்புப் புள்ளிவிவரங்கள், தில்லி ரயில் நிலையத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பக் காத்தி ருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பசியைத் தீர்க்கப் போவதில்லை.
உணவகங்கள் மூடப்பட்டதால் வேலை யிழந்து, எரிவாயுத் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கும் நிலக்கரிக்கும் தள்ளப்பட்ட தொழி லாளர்கள், இன்று தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கி யுள்ளனர். 5 கிலோ சிலிண்டர் போன்ற வெற்று அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இவை கறுப்புச் சந்தையில் விற்கப்படும் கூடுதல் விலை சிலிண்டர்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை
சர்வதேச அளவில் நிலவும் எரிவாயு போக்கு வரத்து முடக்கத்தால் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களுக்கு 40,484 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கவலைப்படும் மோடி அரசு, வேலையிழந்த தொழிலாளர்களின் வாழ்வா தார இழப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
சர்வதேசச் சூழலை இராஜதந்திர ரீதியாகக் கையாண்டு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ‘விஸ்வகுரு’, இன்று மக்களை விறகு அடுப்பிற்கும் நிலக்கரிக்கும் பின்னோக்கித் தள்ளிவிட்டார். விறகு அடுப்புப் புகைக்கும், கறுப்புச் சந்தைக்கும், வேலையிழப்பிற்கும் ஏழை மக்களைத் தள்ளிவிட்ட மோடி அரசின் இந்தச் செயல், ஒரு திட்டமிட்டப் பொருளாதாரத் தாக்குதலேயாகும்.
