சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் பட்டாபிஷேக திருவிழா
நாகர்கோவில், ஏப்.6- சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியைச் சேர்ந்த அன்புவனத்தில் பட்டாபிஷேக திருவிழா நடந்தது. அன்புவனத்தில் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி கடந்த 17 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழா நடந்து வந்தது 17ஆம் நாள் அய்யாவுக்கு பட்டாபிஷேக திருவிழா நடந்தது. காலை அய்யாவுக்கு பணிவிடையும் பகல் உச்சி படிப்பும் மாலை திருஏடு வாசிப்பு திருவிழாவும் பட்டாபிஷேக விழாவும் நடந்தது. தொடர்ந்து திருஏடு வாசித்தவர்களுக்குப் பாராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். அன்பு வனம் நிர்வாகி தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 200 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், ஏப். 6- கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்த வேட்பாளர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தவெக கிள்ளீயூர் நிர்வாகிகள் உட்பட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 133 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குளச்சல் பகுதியில் பாஜக நிர்வாகிகள் உட்பட 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 200பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பறக்கும் படை மூலமாக குமரி மாவட்டத்தில் 51 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்கள் கொட்டி மயங்கிய பெண்ணை மலையிலிருந்து மீட்ட தீயணைப்புத்துறையினர்
நாகர்கோவில்.ஏப் 6- கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சிலம்பு அருகே பன்னிப்பொத்தையில் உள்ள மலை பகுதியில் தொழிலாளர்கள் ரப்பர் மரம் வெட்டும் போது, அங்கே கூடு கட்டியிருந்த மலை தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது. இதில் சில தொழிலாளர்கள் காயத்துடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க சென்ற பாமா (வயது 52) என்ற பெண்ணை மலைத் தேனீக்கள் கொட்டியதில் மயக்கமடைந்தார். மயங்கிய பெண்மணியை மீட்க தொழிலாளர்கள் முயன்றும் தேனீக்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தக்கலை - புலியூர்குறிச்சி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து துறையினரின் உதவியை நாடினர். தக்கலை நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் விரைந்து பன்னிபொத்தையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மலை ஏறி சம்பவ இடத்திற்கு சென்றனர். நெருப்பு புகை மூட்டி மலைத்தேனீக்களை விரட்டி, மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள், அப்பெண்ணை சுமந்து, அங்கிருந்த கனரக வாகனத்தில் வைத்து கீழே கொண்டுவந்தனர். மலையின் கீழே தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் அப்பெண்ணை ஏற்றி தண்ணீர் புகட்டி, ஓட்டுனர் ரியாஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஆசிப் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீணையப்புத்துறை மீட்பு குழுவினர் குமாரபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அறுவடைப் பணியின்போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தூத்துக்குடி,ஏப்.6- கழுகுமலை அருகே, விளைநிலத்தில் அறுவடைப் பணியின்போது மின்சாரம் தாக்கி விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (37). விவசாயியான இவர், க.சுப்ரமணியபுரம் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தனது காட்டில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் பால்ராஜ் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் மீது மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதில், பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த தீக்காயங்களுடன் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்ராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கழுகுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம்!
நாகர்கோவில், ஏப் 6- குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குமரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சரும் குமரியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான த. மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். குமாரபுரம் ஒன்றிய திமுக கிளை செயலாளர் சாஜி, காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மேசியா தாஸ், இளைஞரணி செயலாளர் விபின் ஷாஜூ, தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஐடன் சோனி, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டத் தலைவர் ஷாஜகான் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், மாநி லக்குழு உறுப்பினர்கள் ஆர்.லீமா றோஸ், தோ.வில்சன், மாதர் சங்க மாநில துணை செயலாளர் கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, உஷா பாசி, எஸ்.ஆர். சேகர், கே தங்க மோகனன், அகமது உசேன், ஆர். ரவி, மாத சங்க குமரி மாவட்ட செயலாளர் என் ரெகுபதி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வேட்பாளர் ஆர். செல்ல சுவாமியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திற்கு மேல் வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து பகுதி மக்களையும் நேரடியாக தொடர்பு கொண்டு வாக்குகளை பெற வேண்டும். கூட்டணி கட்சி கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிய டைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் வேட்பாளர்களை தேர்வு செய்து தான் சிறந்தது கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
சிவகங்கை, ஏப்.6- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்குடியில் கடுமையான போட்டி என்பது கிடையாது. உள்ளூரை சேர்ந்த நல்ல வேட்பா ளரை மீண்டும் நிறுத்தியுள்ளோம். நல்ல முதலமைச்சர் இருக்கிறார். ஆதலால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமோ கமாக வெற்றி பெறுவார். தேர்தல் களத்தில் வெளியூர் வேட்பாளர்களை விட உள்ளூர் வேட்பாளர்களை தேர்வு செய்வது தான் சிறந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் தனது சமுதாய பார்வையை வெளிப்படுத்த தயாரா? விஜயின் ரசிகர்கள் அரசியல் களத்தில் சோதிக்கப்படாத நிலையில், அவரைப் பற்றிய கணிப்புகள் ஊகங்கள் தான் என்றார். இறுதியாக பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு இரண்டு மூன்று தினங்களில் வெளியாகும் என்றும், அது போஸ்ட் கார்டு வடிவிலும், விரிவான வடிவிலும் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
பெண் ஆசிரியர்களுக்கு சொந்தத் தொகுதியில் வாக்குச்சாவடி பணி’
மதுரை, ஏப்.6- 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவ லர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள பெண் ஆசிரியர்களுக்கு உரிய சலுகைகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனி வாசகன், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்ப டையில், பெண் ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் சொந்த சட்ட மன்றத் தொகுதியிலேயே வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணி யமர்த்த வேண்டும். மேலும், அந்தத் தொகுதிக்குள் இருந்தாலும் எளி தில் அணுக முடியாத அல்லது தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியமர்த்துவதில் இருந்து அவர்களுக்கு தவிர்ப்பு வழங்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி பணிக்கு செல்லும் பெண் ஆசிரியர் களுக்கு பாதுகாப்பான மற்றும் சிரமமில்லாத போக்குவரத்து வசதி கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.