headlines

img

நம்பிக்கை - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

இன்று மதியம் வரை எங்களின் வீடாக இருந்தது.  இப்பொழுது எரிந்து அழிந்து கொண்டிருந்தது.  நல்லவேளை அவர்கள் ஆண்டவனின் கருணையால் பகலில் வந்தார்கள்.  இதுவே இரவு நேரமாக இருந்தால் நான், என் மனைவி, இரண்டு மகன்கள், சின்னஞ்சிறு மகள், வயதான பெற்றோர் என ஒருவர் கூட தப்பித்து இருக்க முடியாது. நெருப்புக்கு இரையாகி இருப்போம்.
அவர்கள் சுதந்திரமாக அருகில் உள்ள வீடுகளில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  தெரிந்து கொண்டதும் பற்ற வைத்தார்கள். வீட்டில் உள்ளவர், தப்பி பிழைப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் அவகாசம் அளித்தது உண்மையிலேயே அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக இருந்தது.

சுற்றிலும் காவல்துறையினர் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றார்கள். புரிந்து கொண்டதால் ஒருவர் கூட காவல்துறையின் உதவியை நாடவில்லை. வீடும், வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்து வைத்த மதிப்புமிக்க பொருட்களும் கண்முன் அழிவதைப் பார்த்தும் நாங்கள் அழுது கூச்சலிடவில்லை.  மாறாக அமைதியாக இருந்தோம்.  அது ஒருவேளை அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். அதனால்தான் என்னவோ... கைகளில் தூக்கிப் பிடித்திருந்த ஆயுதங்களை சுழற்றி அண்டை நாட்டுக்கு போகும்படி கோஷமிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பொழுது இரவும் வந்தது. எரிந்த வீட்டின் முன்பு அசையாமல் அமர்ந்திருந்தோம். எங்கள் வீட்டுச் சிறுமியைத் தேடிக்கொண்டு அவளது சிநேகிதி வந்திருந்தாள். எப்பொழுதும் போல விளையாட வந்தாளா? அல்லது வேடிக்கை பார்க்க வந்தாளா? தெரியவில்லை. அருகில் வந்து அமர்ந்தவள், எங்களின் முகங்களைப் பார்த்தாள். பிறகு மெல்லிய குரலில், “எங்க வீட்டுக்கு போகலாம் வாங்க” என அழைத்த பொழுது, முதலில் என் மனைவி அழுதாள். பிறகு நாங்கள் எல்லோரும் அழுதோம்.