articles

img

எதிர்காலத்திற்கான நம்பிக்கை எதில் இருக்கிறது?

1911ஆம் ஆண்டு இளம் ஹோ சி மின் (1890-1969) தனது தாயகமான வியட்நாமை ஒரு காலனி நாடாக அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்சுக்குச் சென்றார். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான உறுதிமிக்க தேசபக்தி உணர்வோடு அவர் வளர்ந்திருந்தாலும், அவரது உறுதிப்பாடு, தனிநபராகப் போராடி வீழ்ந்தாலும் பரவாயில்லை என்ற சிந்தனைக்குள் செல்ல அவரை அனுமதிக்கவில்லை. மாறாக, காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருக்கும் வியட்நாம் மக்கள் தங்களது சொந்த வரலாற்றின் பின்னணியையும் பாரம்பரியத்தையும் உரமாக்கி, போராடி விடுதலை பெற வேண்டியது அவசியம் என்பதையும், உலகெங்கிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக நீரோட்டங்களில் இருந்தும் கற்றுக்கொண்டு விடுதலை பெற வேண்டியது அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருந்தார். பிரான்சில் அவர் சோசலிச இயக்கத்தில் பங்கேற்றார். அந்த இயக்கம் அவருக்கு ஐரோப்பிய தொழிலாளி வர்க்க போராட்டங்களைப் பற்றி கற்றுக் கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால், பிரெஞ்சு சோசலிஸ்ட்டுகள் தங்களது நாட்டின் காலனி ஆதிக்கக் கொள்கையை தகர்த்தெறியும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இது ஹோ சி மின்னுக்கு ஆதங்கத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போதுதான் பிரெஞ்சு சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஜீன் லாங்குயிட், ஹோ சி மின்னிடம், காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலை படிக்குமாறு முதன் முதலில் கூறினார். அந்த நூல் வெளிச்சம் தரும் என்று கூறினார். அதன்படி ஹோ சி மின், காரல் மார்க்சின் மூலதனம் நூலைப் படிக்கத் துவங்கினார். அது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. பின் நாட்களில் அவர் நகைச் சுவையாகச் சொன்னார், அந்த புத்தகத்தை பெரும்பாலும் நான் ஒரு தலையணையாகத்தான் பயன்படுத்தினேன் என்று. 

அவர் தேடியது  அந்த நூலில் இருந்தது
1917 அக்டோபர் புரட்சி, சோவியத் குடியரசு என்ற மாபெரும் தேசத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் உதயம் தோழர் ஹோ சி மின்னின் உணர்வலைகளை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. சோவியத் தொழிலாளி வர்க்கமும், விவசாயி வர்க்கமும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றின; அரசுக் கட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொண்டன என்பது மட்டுமல்ல, அந்த அரசின் புதிய தலைமை, உலகெங்கிலும் நடந்து கொண்டிருந்த காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அனைத்திற்கும் மிக வலுவான ஆதரவை உறுதி செய்தது. இது ஹோ சி மின்னுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக தோழர் லெனினின் “தேசிய இனங்கள் மற்றும் காலனித்துவம் தொடர்பான கேள்விகள் குறித்த ஆய்வறிக்கை” என்ற நூலை வாசித்தார். அந்த நூல் 1920ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் கூட்டத்திற்காக லெனினால் எழுதப்பட்டது. 1887 ஆம் ஆண்டு முதல் பிரான்சிடம் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாம் நாட்டின் இளம் போராளி ஹோ சி மின், தனது தேசத்தில் கட்டியமைப்பதற்கான தங்களது சொந்த இயக்கத்திற்கு தேவையான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அடிப்படைகள் லெனினின் இந்த நூலில் இருப்பதைக் கண்டறிந்தார். உடனடியாக அவர் மாஸ்கோவிற்கு சென்றார். அங்கிருந்து பிறகு சீனா சென்றார். அங்கிருந்து வியட்நாமுக்கு திரும்பினார். அங்கு சென்றவுடன், பிரெஞ்சு ஆட்சியாளர்களால் காலனியாதிக்க ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுக் கிடந்த வியட்நாமை மீட்பதற்கும், அதற்குப் பிறகு அமெரிக்காவால் திணிக்கப்பட்ட போரிலிருந்து தேசத்தை காப்பதற்குமான ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கி தலைமையேற்றார். 

காலனி நாடுகளில்  நிலைமை எப்படி இருந்தது?
1929ல் ஹோ சி மின் கூறினார்: “வர்க்கப் போராட்டம் என்பது மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவது போன்ற வழிமுறைகளில் மட்டுமே வரையறுக்கப்பட முடியாதது.” இதைச் சொல்லும் போது அவர் மேற்கத்திய நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி கலாச்சார ரீதியானது என்ற அர்த்தத்தில் அல்ல; மாறாக, முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் இந்தோ - சீனா பிரதேசங்களில் நடைபெறுகிற போராட்டங்கள், பல்வேறு அம்சங்களில் ஒன்றுபட்டவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் தான். இந்த நாடுகளிலும் உலகில் இதுபோன்ற பல பகுதிகளிலும் காலனியாதிக்கத்தின் கட்டமைப்பு, திட்டமிட்டே முன்னேற்றம் எட்டப்படாமல் இருக்கும் உற்பத்தி சக்திகள், பெருமளவில் குவிந்திருக்கும் விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கடந்த கால நில பிரபுத்துவ ஆதிக்க சக்திகளின் பாரம்பரிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொடர்ச்சி (சாதியம் மற்றும் ஆணாதிக்கம் போன்றவை) - போன்ற பல அம்சங்கள் பொதுவானவை. எனவே இத்தகைய காலனிமயமாக்கப்பட்ட பிரதேசங்களில் மார்க்சிஸ்ட்டுகள் இந்த நாடுகளில் நிலவுகிற எல்லா பிரச்சனைகளும் பின்னிப் பிணைந்திருக்கிற எதார்த்தங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது போராட்டக் கொள்கையை உறுதியோடு தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று இயக்கத்தை கட்டமைத்திட படைப்பாக்க நடவடிக்கைகளும் முயற்சிகளும் தேவையாக இருந்தன. ஹோ சி மின் போன்றவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளும், அறைகூவல் அழைப்புகளும் தற்கால அரசியல் சூழல் குறித்த கருத்துக்களாக மட்டுமே இருந்தன; மார்க்சிஸ்ட்டுகளான இந்த தலைவர்கள், அந்த துவக்க கால கட்டத்தில் தங்களது போராட்டக் கோட்பாடுகளை கட்டி வளர்க்கும் விதத்தில் மார்க்சின் கருத்துக்களையோ, ஐரோப்பாவில் இருந்த பிரதான மார்க்சிஸ்ட்டுகளையோ (காரல் கவுட்ஸ்கி மற்றும் எட்வர்டு பெர்ன்ஸ்டேன்) பின்பற்றி அல்லது மேற்கோள் காட்டி எழுதவில்லை. 

சோவியத் புரட்சிக்குப் பிறகு
ஆனால் 1917 அக்டோபர் புரட்சியின் விளைவாக உருவான பாரம்பரியமானது, தேசிய விடுதலைப் போராட்டத்தில் மார்க்சியத்தின் பங்கு எத்தனை மகத்தானது என்பதை உணர்த்துகிறது. இது தொடர்பாக இப்போதும் கூட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1917 சோவியத் புரட்சியானது இந்த உலகில் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களின் வேர்களை இன்னும் ஆழமாக்கின என்றால் மிகையல்ல. 
வடக்கு அட்லாண்டிக் பிரதேச நாடுகளின் எல்லைகளுக்கு வெளியே மார்க்சிய கருத்துக்கள் பரவத் துவங்கியபோது அதன் அடிப்படை அம்சமான வரலாற்றியல் பொருள் முதல்வாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிப் பரவத் துவங்கின. இதுகுறித்து 1963ல் பிரான்ட்ஜ் பன்னான் எழுதிய நூலில் விவரித்துள்ளார். மார்க்சியத்தின் பல்வேறு கூறுகள் நிச்சயம் உலகம் முழுவதிலும் பொருந்தக்கூடியவை; ஆனால் எல்லா இடத்திலும் ஒரே விதமாக அமலாக்கப்படக்கூடியவை அல்ல; மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு இயக்கமும் - வியட்நாமில் தோழர் ஹோ சி மின் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்கள் - முதலில் மார்க்சிய கோட்பாடுகளை தங்களது மண்ணுக்கு ஏற்ற விதத்தில் உள்வாங்கிக் கொள்ளவும், புதிதாக படைக்கவும் வேண்டியிருந்தது. 

காலனி நாடுகளில் இடதுசாரிகளின் பங்கு
காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்த நாடுகளில் மார்க்சிய கொள்கையின் மையமான பிரச்சனை என்னவென்றால், இந்த நாடுகளில் உற்பத்தி சக்திகள் என்பவை ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பிடியால் திட்டமிட்ட முறையில் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன; அதே வேளையில் புதிதாக எழுந்த ஜனநாயக அலைகளால் பழைய சமூக ஆதிக்க கட்டமைப்புகள் முற்றாக அடித்துச் செல்லப்படவில்லை என்பதுதான். எனவே சமூகத்தின் செல்வம் இல்லாத ஒரு இடத்தில் எப்படி நீங்கள் புரட்சியை நடத்துவது என்பதுதான் இந்த நாடுகளில் மார்க்சிஸ்ட்டுகளின் அடிப்படையான பிரச்சனையாக இருந்தது. இத்தகைய தருணத்தில்தான் தோழர் லெனினது பாடங்கள், ஹோ சி மின் போன்ற தலைவர்களின் கருத்துக்களுக்கு ஒத்திசைவாக இருந்தன. ஏனென்றால், ஏகாதிபத்தியமானது இந்தியா, எகிப்து போன்ற இடங்களில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை அனுமதிக்கவில்லை என்றும், இதுபோன்ற உலகின் பல பகுதிகள் மூல பொருட்களை உற்பத்தி செய்து  ஐரோப்பிய நாடுகளிடம் கொடுத்துவிட்டு ஐரோப்பிய தொழிற்சாலைகளில் இருந்து முடிவுற்ற பொருட்களை வாங்குகிறார்கள் என லெனின் வாதிட்டார். எனவே தான் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் மனித விடுதலைக்காகவும் உண்மையிலேயே உறுதியோடு போராடிக் கொண்டிருந்த இந்தப் பிரதேசங்களில் சுதந்திரமான செல்வந்தர் வர்க்கம் உருவாக முடியவில்லை; மாறாக, இந்த காலனி நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், சமூகப் புரட்சிக்காகவும் இடதுசாரிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

இதன் பொருள் என்னவென்றால், இந்த நாடுகளில் உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பது உள்பட சமூக சமத்துவத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கான போராட்டத்தை இடதுசாரிகள் எடுத்துச் சென்றார்கள். பல நாடுகளில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகும், அங்கு பற்றாக்குறையாக இருந்த வளங்களையும் பயன்படுத்தி மக்களின் முன்னேற்றத்திற்காக அந்த வளங்களை கையாள்வது என்பதை உறுதி செய்தவர்கள் இடதுசாரிகளே ஆவர். உழைப்புச் சந்தையை சீரிய முறையில் ஒழுங்காற்று செய்து, இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் சமூக உற்பத்தியை உறுதி செய்வது; மற்றும், அதைத் தொடர்ந்து கல்வி, சுகாதாரம், சத்துணவு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் மேலும் முன்னேற்றமடைய செல்வ வளங்களை சமூகமயமாக்குவது என்ற சிந்தனையை வலுவாக முன்னெடுத்துச் சென்றவர்களும் இடதுசாரிகளே. 

1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு காலனியாதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த பகுதிகளில் சோசலிசப் புரட்சிகள் நடைபெற்றன. மங்கோலியா (1921), வியட்நாம் (1945), சீனா (1949), கியூபா (1959), கினியா பிசாவு மற்றும் காபோ வெர்டே (1975) மற்றும் புர்கினா பசோ (1983) ஆகிய நாடுகளில் சோசலிசப் புரட்சிகள் நடந்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் பிரதானமாக விவசாய சமூகங்களே. இந்த சமூகங்களின் மூலதனம் அவர்களது காலனியாதிக்க ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டது. இந்த நாடுகளின் உற்பத்தி சக்திகள், அந்த நாட்டிலிருந்து மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், முடிவுற்ற பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கும் விதத்தில் மட்டுமே மேம்படுத்தப்பட்டன. இந்த பின்னணியில், ஒவ்வொரு நாட்டிலும் நடந்த புரட்சியானது, அங்கு கோலோச்சிய காலனியாதிக்க ஆட்சியாளர்களின் மிகக் கடுமையான வன்முறை - வெறியாட்டத்தை எதிர்கொண்டது. அவர்கள் அந்த சமூகத்தில் எஞ்சியிருந்த செல்வங்களையும் கொள்ளையடிப்பதும், அழிப்பதுமே குறியாகக் கொண்டிருந்தார்கள். 

வியட்நாம் மீதான பயங்கர யுத்தம்
இந்த கொடிய வன்முறையின் அழியாத சின்னமாக நிற்பதுதான் வியட்நாம் மீதான யுத்தம். ‘ஆப்ரேசன் ஹேட்ஸ்’ என்ற வியட்நாமுக்கு எதிரான யுத்த நடவடிக்கை விபரங்கள் விரிவான வரைபடத்தை நம் கண் முன்னே காட்டுகிறது.  1961 முதல் 1971 வரை பத்தாண்டுகாலம் அந்த பயங்கரம் நடந்தது. வியட்நாமில் ஒரு புல் பூண்டு கூட முளைக்கக்கூடாது என்ற பேரழிவு நோக்கத்தோடு அமெரிக்க அரசு

++++++++++++++++++++++++++++++++++++++++

5ஆம் பக்கம் தொடர்ச்சி...

73 மில்லியன் லிட்டர் ரசாயன விஷத்தை நாடெங்கிலும் தெளித்தது. அந்த காலத்தில் மிக பயங்கரமான ரசாயன ஆயுதமாக கருதப்பட்ட ‘ஏஜெண்ட் ஆரஞ்ச்’ என்பது, வியட்நாமின் விவசாயப் பெருவெளி எங்கும் ஸ்பிரே கருவியால் தெளிக்கப்பட்டது. இந்த யுத்தம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது மட்டுமல்ல, சோசலிச வியட்நாமை ஒரு பயங்கரமான துயரத்தின் பிடியில் சிக்கச் செய்தது: பல பத்தாயிரக்கணக்கான வியட்நாமின் குழந்தைகள் மூளை அழற்சி நோயோடு முதுகுத்தண்டு பாதிப்புகளோடு இன்னபிற குறைபாடுகளோடு பிறந்தன; லட்சக்கணக்கான ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் விஷம் தோய்ந்தவையாக மாற்றப்பட்டன. மருத்துவரீதியாகவும், விவசாய ரீதியாகவும் வியட்நாமின் மீது ஏவப்பட்ட இந்த பேரழிவு கிட்டத்தட்ட அந்நாட்டின் ஐந்து தலைமுறைகளை கடுமையாக பாதித்தது. இன்னும் பல தலைமுறைகளுக்கு பாதிப்பு வீச்சு நீடித்துக் கொண்டிருக்கிறது. வியட்நாமின் சோசலிஸ்ட்டுகள் ஒரு பாடப்புத்தகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சோசலிசத்தை தங்களது நாட்டில் கட்டமைக்க முடியவில்லை; ஆனால் தங்களது நாட்டின் மீது ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட எண்ணற்ற கொடுமைகளையும், துயரங்களையும் எதிர்கொண்டு சோசலிசத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அவர்களது சோசலிசப் பாதையானது முற்றிலும் படுபயங்கரமான எதார்த்த நிலைமையை எதிர்கொண்டே பயணப்பட்டிருக்கிறது. அவர்களது சொந்த வரலாறு மற்றும் எதார்த்த நிலைமையின் அடிப்படையில் சோசலிசம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சிறு சிறு பிரசுரங்கள் வாயிலாக...
காலனியாதிக்க உலகில் இருந்த பல மார்க்சிஸ்ட்டுகள் மார்க்சையே படித்திருக்காதவர்கள். அவர்கள் அந்த காலகட்டத்தில் எளிதாக கிடைக்கப் பெற்ற சிறு பிரசுரங்கள் மூலம் மார்க்சியத்தைப் பற்றி படித்து அறிந்து கொண்டார்கள். லெனினைப் பற்றியும் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள். புத்தகங்கள் மிகவும் விலை அதிகமாக இருந்தன. கடல் கடந்து அவை  கிடைப்பதும் கடினமாக இருந்தது. கியூபாவின் போராளி கர்லோஸ் பலினோ (1848 - 1926) மற்றும் தென்னாப்பிரிக்காவின் போராளி ஜோஷி பால்மர் (1903-1979) போன்றவர்கள் மிக மிக வறிய, எழுத்தறிவற்ற குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தோழர் மார்க்சின் அரசியல் பொருளாதார விமர்சனக் கருத்துக்கள் உருவான அறிவுஜீவி பாரம்பரியத்தின் வாய்ப்புகளைப் பெற இயலாதவர்கள். ஆனால் அவர்கள் மார்க்சியத்தின் சாராம்சத்தை தங்களது போராட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டார்கள். வாசித்து அறிந்ததன் மூலமாகவும் தங்களது சொந்த அனுபவங்கள் மூலமாகவும் புரிந்து கொண்டார்கள். தங்களது நாட்டிற்கு பொருத்தமான முறையில் அதை எப்படி அமலாக்குவது என்று கோட்பாடுகளை கட்டமைத்தார்கள். 

எதிர்காலத்திற்கான நம்பிக்கை
இன்றைக்கு நமது இயக்கங்களுக்கு உறுதிப்பாடுடன் கூடிய தொடர் வாசிப்பு ஒரு தூண் போல இருக்கிறது. ஒரு சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான நமது நம்பிக்கைகள் அந்த வாசிப்பில்தான் அமைந்திருக்கின்றன. இந்த நோக்கத்திற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சிவப்பு புத்தக தினம் கொண்டாடுகிறோம். கடந்தாண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையின் 172 ஆம் ஆண்டையொட்டி பெருவாரியான பொது வெளிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிவப்பு புத்தக தினத்தை கொண்டாடினார்கள். 1848 பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையை அன்றைய தினம் பரவலாக வாசித்தார்கள். இந்தாண்டு, பெருந்தொற்று அபாயம் தொடர்ந்து நீடிக்கும் வகையில், சிவப்பு புத்தக வாசிப்புப் பேரியக்கம் உலகின் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வாயிலாக நடைபெறவிருக்கிறது. நீங்கள் உங்கள் பகுதிகளில் சிவப்பு புத்தக தின நிகழ்வுகளை நடத்துங்கள். நமது பதிப்பாளர்களிடம் (தமிழகத்தில் பாரதி புத்தகாலயம்) கம்யூனிஸ்ட் அறிக்கை உள்ளிட்ட சிவப்பு புத்தகங்களை கேட்டு பெறுங்கள். நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே பொதுவெளியில் நிகழ்ச்சி எதுவும் நடைபெற வாய்ப்பு இல்லையென்றால் சமூக ஊடகங்கள் வாயிலாக நடைபெறும் சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கத்தில் அவசியம் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான சிவப்பு புத்தகங்கள் உங்கள் போராட்டங்களை விளக்குபவை. 

ஹோ சி மின் என்றால் ‘ஒளியின் வட்டம்’ என்று பொருள். அந்த மாமனிதர் எப்போதும் ஒரு கையில் லக்கி ஸ்டிரைக் சிகரெட்டுடனும் மறு கையில் ஒரு புத்தகத்துடனும் காணப்படுவார். அவர் வாசிப்பதை நேசித்தார். விவாதிப்பதை ஊக்கப்படுத்தினார். வாசிப்பும் விவாதமும் இயற்கையின் இயங்கியலை புரிந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அவருக்கு உதவியது. சிவப்புப் புத்தகம் உங்களுக்கு அருகில் காத்திருக்கிறது. சிவப்புப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

தமிழில் :  எஸ்.பி.ராஜேந்திரன்

குறிப்பு : இந்த கட்டுரை பகுதி 4-ஆம் பக்கம், 5-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுரை தொகுப்பில் 5-ஆம் பக்கத்தில் பாதியளவு கட்டுரையும் சேர்த்து தொகுக்கப்பட்டுள்ளது.....