headlines

img

அமெரிக்காவின் படுதோல்விக்கு சாட்சியம் ஆப்கானிஸ்தான்....

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பழிவாங்க தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டப்போகிறேன் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் படுதோல்வியுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளன. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானிலிருந்த நஜிபுல்லா தலைமையிலான இடதுசாரி அரசை ஒழித்துக் கட்டுவதற்காக அமெரிக்கா வால் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் தலிபான்கள். அவர்கள்தான் நஜிபுல்லாவை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.

இடதுசாரி ஆட்சிக் காலத்தில் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆப்கான் வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர். பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆண்களும் பெண்களும் பல சர்வதேச  விளையாட்டுகளில் தங்களது திறமைகளை நிரூபித்தனர். தலிபான் அரசு அமைந்த பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது. விளையாட்டுக்கள் தடைசெய்யப்பட்டன.  பெண்கள் விளையாடவும் போட்டிகளில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கல்வி முறை ஒழித்துக்கட்டப்பட்டு மதம் சார்ந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதனால் அறிவியல், கல்வி, பண்பாடு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது. உணவுப் பஞ்சம் ஏற்பட்டுஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர்.

இந்த நிலையில் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பழிவாங்கப்போவதாகக் கூறி நோட்டோ படைகளோடு ஆப்கானில் நுழைந்த அமெரிக்கா படுதோல்வியுடன் வெளியேறியுள்ளது. மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாகியுள்ள தால் தலிபான்கள் வசம் மீண்டும் ஆப்கான் தற்போது வீழ்ந்து கொண்டிருக்கிறது.கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப் தாலிபான்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது. இந்த உடன்பாட்டின் படி அமெரிக்காவுடன், நேட்டோ படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும். தங்களதுகட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வேறு எந்த பயங்கரவாத இயக்கத்துக்கும் தலிபான்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

ஆனால் ஆப்கன் படைகளுடன் சண்டையை நிறுத்துவதற்கு தலிபான்கள் ஒப்புக்கொள்ள வில்லை. தலிபான்களின் கடுமையான தாக்குதல்களால் ஆப்கான் படையினர் முற்றிலுமாக பின்வாங்கும் நிலை ஏற்பட்டு அங்கு மிக மோசமான சூழல் நிலவுகிறது. தலிபான்களுடனான போரை ராணுவ ரீதியாக வெல்வதை விட அரசியல் ரீதியான தீர்வே முக்கியம்.  இல்லை என்றால் மத அடிப்படையில் இயங்கும் மற்றொரு மிகப் பிற்போக்கான நாடாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடும். ஆப்கனில் அமைதியை நிலைநாட்ட இந்தியாஆக்கப்பூர்வமாக உடனடியாக தலையிட வேண்டும். ராஜீய ரீதியில் இதற்கான முயற்சி களைத் தீவிரப்படுத்தவேண்டும்.