headlines

img

நாடாளுமன்றத்தை அவமதிப்பது யார்?

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல்-டீசல்விலை உயர்வு, வேளாண் சட்ட திருத்தம் உள்ளிட்டமுக்கியமான பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணி அரசு இந்த பிரச்சனைகளை விவாதிக்க மறுப்பதால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது. இதை ஒருவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இன்சூரன்ஸ் துறையை முற்றாக தனியாருக்கு தர வகை செய்வது உள்ளிட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. 

நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு மோடி அரசின் பிடிவாதப் போக்கே காரணம். ஆனால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்து வருவதாக அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து எந்தவொரு விசாரணைக்கும் உடன்படமறுக்கும் ஒன்றிய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கிறது. ஆனால் இதற்கான பழியை எதிர்க்கட்சிகளின் மீது தூக்கிப் போடுகிறார் பிரதமர் மோடி. 

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து நேரில் பேசக்கூட பிரதமருக்கு நேரம் இல்லை. இதன்மூலம் இந்திய விவசாயிகளை அவர் அவமதிக்கிறார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மறுப்பது மட்டுமின்றி அதுகுறித்து விவாதிக்கக்கூட ஒன்றியஅரசு தயாராக இல்லை. இதன்மூலம் நாடாளுமன்றத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாஜக கூட்டணி அரசு அவமதிக்கிறது.

இன்சூரன்ஸ் துறையை தனியாருக்கு தருவதற்கு ஏதுவாக அரசு பங்குகளை குறைத்துக்கொள்ள வழிசெய்யும்  சட்ட முன்வரைவு எவ்விதவிவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தைகவுரவப்படுத்தும் செயலா, கண்ணியப்படுத்தும் நடவடிக்கையா என்பதற்கு பிரதமர் மோடிதான் பதில் சொல்ல வேண்டும். மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றபிறகு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் பெரும்பாலும் பங்கேற்பதில்லை. நாட்டின் அதிமுக்கியமான பிரச்சனைகள் குறித்துஅவைகளில் விவாதம் நடந்தால் கூட பிரதமர்என்கிற முறையில் அதற்கு அவர் பதில்சொல்வதில்லை.  இதுதான் நாடாளுமன்றத்தை மதிக்கும்மாண்பா?

புதிய கல்விக்கொள்கை என்றாலும் சரி, வேளாண் சட்ட திருத்தம் என்றாலும் சரி உரியவிவாதம் இல்லாமல் நிர்ப்பந்தமாக நாட்டு மக்களின் மீது இந்தச் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. பெகாசஸ் உளவு விவகாரம் இந்திய மக்கள் அனைவரையும் அவமதிப்பதாக உள்ளது. உண்மையில் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுப்பதன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் மோடி அரசின் கைகளில்தான் நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படுவதற்கான வழிமுறைகள் உள்ளன.