கர்நாடக மாநில முதல்வர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். இதைஅறிவிக்கும் போது அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கடந்த சில மாதங்களாகவே எடியூரப்பாவை முதல்வர் பொறுப்பிலிருந்து விலக பாஜக மேலிடம் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை தொடர்ந்து மறுத்து வந்த அவர் சட்டமன்றத் தேர்தல் வரும் வரை நானேமுதல்வர் பொறுப்பில் தொடர்வேன் என்று கூறிவந்தார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பிறகும் அவர் இதையே கூறினார். தன்னுடைய முதல்வர் பதவியை பாதுகாத்துக் கொள்வதாக பிரதமரை சந்திக்கவில்லையென்றும், மேகதாது அணைகட்ட அனுமதி உள்ளிட்ட கர்நாடக மக்களின் நலனுக்காகவே சந்தித்தேன் என்றும் கூறினார்.
ஆனால் கர்நாடக பாஜகவில் கோஷ்டிபூசல் எனும் வெள்ளம் அதிகரித்த நிலையில், தன்னுைய பதவிக்கு அணைகட்டிக் கொள்ளவே அவர் பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. கட்டுப்பாடான கட்சி என்று கூறிக் கொள்ளும் பாஜகவில் கோஷ்டிபூசல் எந்தளவுக்கு கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது என்பதையே எடியூரப்பா பதவி பறிக்கப்பட்ட விவகாரம் உணர்த்துகிறது.எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிலரே அவருக்கு எதிராகவும் அவரதுமகனுக்கு எதிராகவும் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்; வெளிப்படையாகப் பேட்டியளித்தனர். எடியூரப்பா சாதி அரசியலை பயன்படுத்தி தப்பிக்க முயன்றார். பாஜக வளர்த்துவிட்ட சாதி அரசியல் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. இத்தகைய போக்கு எந்தளவுக்கு ஆபத்தானது; சமூகத்தை பிளவுபடுத்தக்கூடியது என்பதற்கு கர்நாடகம் ஒரு உதாரணம்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத போதும், எடியூரப்பா ஆட்சியமைத்தார். ஆனால் அவரது அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக தன்னுடைய வழக்கமான குதிரை பேர அரசியலை பயன்படுத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்தது. லோக்பால் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளிஎன்று அறிவிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டவர் எடியூரப்பா.
ஆனால் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அவரை மீண்டும் முதல்வராக்கியது பாஜக. தற்போது கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் அவருடைய முதல்வர் பதவியை காவு கொண்டிருக்கிறது. எடியூரப்பா ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவதோடு மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் எடியூரப்பா அரசு தோல்வியடைந்த நிலையில், முதல்வரை மாற்றுவதன் மூலம் தன்னுடைய தோல்வியை மறைக்க பாஜக முயல்கிறது. ஆள்பிடிஅரசியலின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தற்போது ஆளை மாற்றி அதிருப்தியை சமாளிக்கமுயல்கிறார்கள். இதற்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.