headlines

img

பாலியல் வணிகம் எனும் நவீன அடிமை முறை கள்ளக்குறிச்சியில் வெளிப்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் கோரமுகம்

பெண்களையும் குழந்தைக ளையும் கடத்தி, அவர்க ளைக் கட்டாயப்படுத்தி பாலியல் வணிகத்தில் தள்ளுவது (sex trafficking) என்பது பெண்களுக்கு எதி ரான உலகளாவிய வன்முறை ஆகும். 

பாலியல் மற்றும் உழைப்புச் சுரண்டல் 

எவ்வளவு சட்டங்களும் சர்வதேச நடைமுறைகளும் இருந்தாலும் கூட மனிதர்களைக் கடத்தி அவர்களை உழைப்பு மற்றும் பாலியல் ரீதியாக சுரண்டுவது, அவர்களைப் பண்டங்க ளைப் போல் விற்பனை செய்வது என்பது அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் (ஆண்டொன்றுக்கு சராசரி 150 பில்லியன் டாலர்) ஈட்டக்கூடிய தொழிலாக இது இருந்து வருகிறது.  இந்த கடத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்களும் குழந்தைகளும் தான்.

இந்த வணிகத்தில் தள்ளப்படும் பெண்கள் ஏதோ செல்வச் செழிப்புடன் வாழ்வதாக சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் உடலை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழிலில் சராசரி யாக கையில் கிடைப்பது  ஒரு நாளைக்கு வெறும் 150 ரூபாயிலிருந்து 300 வரை தான்.  செல்வச் செழிப்பில் மிதப்பவர்கள் அவர்களை கடத்தும் கடத்தல்காரர்கள் தான். முதலாளித்துவத்தின் கோரமான முகம் தான், பெண்களை கடத்தி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்துவது என்பது.

பாலியல் வணிகம் பெண்களின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டதா? 

சமூகத்தில் பலரும்,  கடத்தப்படும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து பாலியல் உணர்வு தூண்டப்பட்டோ அல்லது சுலபமாக பணம் சம்பாதிப் பதற்காகவோ இதில் ஈடுபடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து முதல் 15 முறை பாலியல் ரீதியான உறவுக்கு இயந்திர கதியில் முரட்டுத்தனமாக உட்படுத்தப் படும் பெண்கள், வலி வேதனை அன்றி என்ன சுகத்தை அடையப் போகி றார்கள்?

கடத்தப்படும் பெண்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்குவது, பட்டினி போடுவது, சித்ரவதை செய்வது, உடல் ரீதியாக தாக்குவது, பாலியல் பலாத் காரத்திற்கு பலமுறை உட்படுத்துவது என்ற கொடுமைகளை, அவர்களை ஒடுக்கி, தங்கள் வழிக்கு வர வைப்ப தற்காக கையாளுகிறார்கள்.

எந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து காத்திருக்கிறது.

“வேலை வாங்கித் தருகிறேன்; படிக்க வைக்கிறேன்; வீட்டு வேலைக்கு வந்தால் அதிக சம்பளம் தருகிறேன்; திரு மணம் செய்து கொள்கிறேன்” என்ற ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகிறார்கள். ஒரு முறை கடத்தல்காரர்கள் கையில் சிக்கி விட்டால், சில நொடிகளுக்குள் இந்த பெண்கள் கைமாறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினம். 

வெறும் 45 நிமிடமே!

அமெரிக்காவின் கிங் மாவட்டத்தின் கவுன்சில் உறுப்பினர் ரீகன் டன் கூறு கிறார், “இங்கு வெஸ்டலேக் மையத்திற்கு தனியாக வரும் மைனர் குழந்தைகளைக்  கடத்தல்காரர்கள் அணுகுவதற்கு ஆகும் நேரம் வெறும் 45 நிமிடமே.”

இந்தியாவில் நிகழும் ஆள்கடத்தல் வன்முறையில் 90% உள்நாட்டிலேயே நடக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஏழைப் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இவர்களில் ஒருவரைக் கூட மீட்க முடியவில்லை. பத்தில் ஒரு குற்றவாளி தான் தண்டனைக்கு உட்படுகிறார். இந்த குற்றத்திற்கான சட்டத்தின் (ITPA) நோக்கமே பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை குற்ற வாளிகள் ஆக்கக் கூடாது; பாதிக்கப்பட்ட வர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுதான்.

அதிர்ச்சி தரும் கள்ளக்குறிச்சி சம்பவம்

இத்தகைய பின்னணியில்தான் கள்ளக்குறிச்சியில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தி பாலியல் சுரண்டல் செய்த சம்பவத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைத்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை பல அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் விகேசி கார்டனில் உள்ள ஸ்ரீராம் நகரில், ஒரு வீட்டில் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து கடந்த ஆறு மாத காலமாக கல்பனா என்பவர், பாலியல் வணிகம் செய்து வந்துள்ளார். 

தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் பெண்களைக் குறி வைத்து  அழகுக் கலை நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ள தாக தெரிய வருகிறது. வாட்ஸ் அப் குரூப் மூலமாக பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்களை யார் கேட்கிறார்க ளோ அவர்களுக்கு பெண்களை அனுப்பு வது என்று செயல்பட்டு இருக்கிறார்கள். இது மட்டுமின்றி மேற்சொன்ன வீட்டி லும் இது நடந்துள்ளது.

உண்மை அறியும் குழுவுக்கு கிடைத்த தகவல்கள்

 காவல்துறையினர் 18.9.2024 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து ‘ஒழுக்கக் கேடான’ கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (Immoral trafficking prevention act - ITPA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்பனாவின் அலைபேசியில் இருந்த தொடர்புகள் மூலமாக சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி சரகத்தில் இருந்து மொத்தம் 17 பேரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 16 பெண்களை மீட்டுள்ளனர். இதில் ஒரு பெண் 17 வயது மைனர் என்றும் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐடிபிஏ (ITPA) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் குற்றத்தின் ஆழத்தை பற்றி கவலைப் படாமல், நான்கே நாட்களில் உளுந்தூர் பேட்டை நீதிமன்ற நடுவர் (எண்.1)  பிணை வழங்கியுள்ளார். 

இந்த குற்றத்திற்கு ஒத்துழைத்ததாக காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டு பின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவர் திருக்கோவிலூரில் பணியாற்றிய போது கல்பனாவின் தொடர்பு கிடைத்தது என்றும் அவர் உளுந்தூர்பேட்டைக்கு மாறுதலாகி வரும்போது கல்பனாவின் கும்பல் தங்கள் தொழிலை உளுந்தூர் பேட்டைக்கு மாற்றிக் கொண்டது என்றும் தெரிய வருகிறது.

டிஎஸ்பி, பாலியல் வணிகத்திற்கு உதவி செய்தது மட்டும் அல்லாமல் அதில் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்களை தன்னுடைய பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்த உடனே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு வினர்,  நடவடிக்கை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்துடன் இணைந்து நடத்தியுள்ள னர். மாநில அளவிலும்  நேர்மையான புலன் விசாரணை தேவை என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிரட்டிப் பணிய வைக்கும் கந்து வட்டிக்கும்பல்

கள்ளக்குறிச்சியில், மூன்று வருடங்க ளுக்கு முன்பாக, கந்து வட்டி தொழில் செய்யும் நபர், இளம் பெண்கள் தங்கள் காதலருடன் இருப்பதை புகைப்படம் எடுத்து, அவர்களை மிரட்டி, தனது ஆசை க்கு பணிய வைத்த நிகழ்வும்; சங்கராபுரத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு குழந்தைகளின்  அந்தரங்க தருணத்தை புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணிய வைத்த நிகழ்வும்; ஜனவரி 2023 இல் வீரசோழபுரத்தில் 100 நாள் வேலை செய்பவர்களின் புகைப்படங்களை ஆவணங்களிலிருந்து எடுத்து உரு மாற்றம் (Morphing) செய்து தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது. இது கள்ளக் குறிச்சி வட்டாரத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது என்று மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேவி கூறுகிறார்.

உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்

1 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 
ஐடிபிஏ (ITPA) மற்றும் கொத்தடிமை ஒழிப்புச்  சட்டங்களின் கீழ் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 

2 பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்குவதற்கு ஏற்ற கவுன்சிலிங், மருத்துவ வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

3 வேலை வாய்ப்பு முகாம் மூலமாக பெண்களைத் தொடர்பு கொண்ட முறை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்,  “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஈர்த்து உள்ளனர்” என்று கூறுகிறார்.

4கடந்த காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களிலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம்களுக்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணை செய்ய வேண்டும்; காவல்துறை இந்த கோணத்திலும் புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

5 பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் செயலுக்கு அவர் மீது
ஐடிபிஏ (ITPA) சட்டப்படி வழக்குப் பதிவு
செய்து கைது செய்ய வேண்டும்.

6மீட்கப்பட்ட 17 வயது பெண்  நீதிமன்றத்தில், தான் உறவினர் வீட்டுக்குவந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். குற்றம் இழைத்த டிஎஸ்பி மகேஷ்பணியில் இருந்த போது தான் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதுபாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியோகட்டாயப்படுத்தியோ அல்லது இவ்வாறு வாக்குமூலம் தரச்சொல்லி, சொல்லிக் கொடுத்தோ நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்தப் பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவரை ஆற்றுப்படுத்திய பிறகு,புதிதாக நீதிமன்ற வாக்குமூலம் பதிவுசெய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் போக்ஸோ சட்டத்திலும் எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் 
சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

7நீதிமன்ற பிணையின் மீது மேல்முறையீடு அல்லது அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக காவல்துறை எடுக்க வேண்டும்.

8தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் உள்ளூர் போலீஸ் அல்லாமல் சிபிசிஐடி பிரிவினர் சிறப்புப் படை அமைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தி பாலியல் சுரண்டல்செய்யும் கும்பல்களைக் கண்டுபிடித்துநடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும்.

9Immoral trafficking Prevention Act (ITPA) என்பதில் உள்ள ‘Immoral’ என்ற வார்த்தைக்கு ‘ஒழுக்கக்கேடான’ என்று அர்த்தம். இந்த வார்த்தை பெண்களை குற்றம் சுமத்துவதாக இருக்கிறது. இதைப் பெண்களுக்கு எதிரான வன்முறையாக பார்க்க வேண்டும் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக பார்க்கக் கூடாது. எனவே இந்த சட்டத்தின் பெயரை Prohibition of Trafficking in women 
and children (protection, prevention and redressal) Act அதாவது, பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பாதுகாப்பு, முன் தடுப்பு, ஆற்றுப்படுத்தல் சட்டம் என்று மாற்ற வேண்டும்.

10அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘பாலியல் வணிகம் தடுப்புகாவல் பிரிவு’ தனியாக உள்ளது. இது சூதாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் கவனிக்கும். அதற்கு Anti Vice
Squad என்று பெயர். இது மாற்றம் செய்யப்பட்டு வன்முறையின் ஆழத்தை மனதில் கொண்டு, ‘ஆள் கடத்தும் வன்முறை தடுப்பு பிரிவு’ என்று தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்.தமிழக அரசின் கவனத்திற்கு...

11சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு நீதித்துறை அகாடமி (எதிர்) தமிழ்நாடு அரசு என்ற வழக்கில் நீதியரசர்கள் ஏ.பி.ஷா மற்றும் பிரபா ஶ்ரீ தேவன் ஆகியோர் ஐடிபிஏ (ITPA) சட்டத்தின் கீழ் பிறப்பித்த (26.3.2008) வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை என்று அறியப்படுகிறது. 8,16,11,3,1 என்ற எண்ணிக்கையில் தான் வழக்குகள் முறையே 2018, 2019, 2020, 2021, 2022 இல்
ஐடிபிஏ (ITPA) சட்டத்தில் பதிவாகியுள்ளன. (ஆதாரம் : 4.1.2024- “Only onetrafficking case filed by TN units inall of 2022” - Subashini Vijayakumar-The New Indian Express Online newspaper). இதுவே சட்டம் முறையாக பயன்படுத்தப்படவே இல்லை என்பதற்கு மிக முக்கிய சான்றாகும்.

 இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஐடிபிஏ (ITPA) சட்டம் தொடர்பாக தமிழ் நாடெங்கிலும் இருக்கும் நீதித் துறை நடுவர்களுக்கும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அங்கங்களின் அதி காரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 

பள்ளிகள், கல்லூரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் குற்றம் எப்படி நடக்கிறது என்பது தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் சுரண்டலில் இருந்து காப்பாற்றப்படும் பெண்கள் வாழ்வை புனரமைப்பது என்பதில் பல சவால்கள் உள்ளன. எனவே உணர்வுப்பூர்வமாக தொடர்ந்து பல்முனை நடவடிக்கைகள் மேற்கொள்வதே உண்மையான பலன் தரும்.

“பெண்களைக் கடத்தி பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குவதற்கு எதிராக மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட வேண்டிய ஆலோசனைக் குழு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இல்லை. மற்ற சில மாவட்டங்களில் பெயரளவிலேயே இக்குழு இருப்பதாக தெரிகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.” 

கே.பாலகிருஷ்ணன், 
மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

“கல்வி நிறுவனங்களில் இது நடப்பது ஆபத் தானது. சில வருடங்க ளுக்கு முன்னால் அருப்புக்கோட் டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி என்பவர் 4 மாணவிகளை பாலியல் வணி கத்தில் ஈடு படுத்த முயற்சி செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். இப்போது அவருக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனை.”

 அ.ராதிகா, 
மாநிலப் பொதுச் செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்

“கடலூரில் உள்ள பள்ளி மாணவிகள் பாலியல் வணிகத்தில் தள்ளப்பட்டபோது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றவாளியை தண்டிக்கப் போராடியதுடன் பாதிக்கப்பட்ட வர்களை காப்பகத்தில் வைத்து பாதுகாப்பு கொடுத்தது.”

எஸ்.வாலண்டினா 
மாநிலத் தலைவர், ஜனநாயக மாதர் சங்கம்