கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு நிலவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம்என அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் தடுப்பூசி இருப்புகுறித்த நிலவரங்களை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் பொதுத்தளத்திலோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து தடுமாறி வருகிறது. கொரோனா தொற்றின் முதலாவது அலை நாட்டு மக்களைசூறையாடிய போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இரண்டாவது அலையின் தீவிரம் குறித்துமருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தநிலையில், ஒன்றிய அரசு உள்நாட்டு தேவையைமுன்னுணராமல் ஆறு கோடி யூனிட் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.செங்கல்பட்டு உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்த தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வந்தது. இதனிடையே தடுப்பூசி திருவிழா என்று மோடி அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த முன் தயாரிப்பும் ஒன்றிய அரசிடம் இல்லை.
தனியார் தடுப்பூசி நிறுவனங்கள் ஒரே மருந்துக்கு மூன்று வகையான விலை தீர்மானித்ததையும் ஒன்றிய அரசு அனுமதித்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அரசின் அணுகுமுறையை வன்மையாக கண்டித்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமுதல்வர்களுக்கு, அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை ஒன்றிய அரசு ஏற்க கூட்டாகவலியுறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார்.தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கக்கூட ஒன்றிய அரசு மறுத்தது. நீதிமன்றங்களின் தொடர்ச்சியான கண்டனம் மற்றும் இந்திய மக்களின் அழுத்தம் காரணமாக ஒன்றிய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவிக்க நேர்ந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படிதமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து ஏமாற்றத்தோடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தநிலை நீடித்தால் அனைவருக்கும்தடுப்பூசி என்ற இலக்கு எப்போது நிறைவடையும் என்று கூற முடியாது. இந்தநிலையில் ஒன்றியஅரசு தடுத்தாலும், தடுப்பூசி குறித்த உண்மைநிலையை மக்களிடம் கூறுவோம் என தமிழகமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மக்களிடம் உண்மை நிலையை கூறுவது மட்டுமின்றி தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் எதையும்மறைக்கக் கூடாது.