headlines

img

இவர்கள் செய்த குற்றம் என்ன?

விவசாயிகள் மீது வரலாறு காணாத அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள மோடி அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகிற ஊடகவியலாளர்களை குறி வைத்து பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஜனவரி 28 அன்று உத்தரப்பிரதேச காவல்துறை, மூத்த பத்திரிகையாளர்களான மிருணாள் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆக்ஹா ஆகியேருக்கு எதிராகவும் கேரவன் பத்திரிகையின் ஆசிரியர்களான பரேஷ் நாத், ஆனந்த் நாத் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் ஆகியோருக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளது.

இவர்கள் செய்த குற்றம் என்ன?  ஜனவரி 26 அன்று செங்கோட்டையில் நடந்தசம்பவத்தின் போது நவ்ரீத் சிங் என்ற விவசாயிகொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டதுதான் இவர்களது குற்றம் என்கிறது உத்தரப்பிரதேசத்தின் யோகி அரசு ஏவிவிட்டுள்ள போலீஸ். நவ்ரீத் சிங், போலீஸ் சுட்டதில் குண்டு பாய்ந்து பலியானார் என்று முதலில் வந்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அதை போலீஸ் மறுக்கிறது.நவ்ரீத் சிங், தடுப்பை தாண்டி டிராக்டரை ஓட்டிச் செல்லும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இறந்தார் என்று போலீஸ் கூறுகிறது. அவ்விதமே ஒரு உடற்கூராய்வு அறிக்கையையும் தயாரித்து வெளியிட்டு விட்டார்கள்.இதற்கு பின்னர், மேற்கண்ட பத்திரிகையாளர்கள் மீது திட்டமிட்டு ஆறு பிரிவுகளின் கீழ் கடுமையான வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் மீது, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, தில்லி ஆகிய இடங்களில் ஆர்எஸ்எஸ் கும்பல்கள் அளித்த வெவ்வேறான புகார்களின் அடிப்படையில் ஆங்காங்கே வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 30 அன்று தில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மந்தீப் புனியா மற்றும் தர்மேந்தர் சிங்ஆகியோர் மீது தில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்துவிட்டது. இவர்கள் செய்த குற்றம், சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி ஆய்வு செய்து விரிவாக எழுதியதுதான். அதே நாளில் இஸ்மத் ஆரா என்ற பத்திரிகையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாளில் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் காவல்நிலையத்தில் தி வயர் இணைய இதழின்ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பெண் பத்திரிகையாளர் சங்கம், இந்தியபிரஸ் கிளப், தில்லி பத்திரிகையாளர் சங்கம், எடிட்டர்ஸ் கில்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியுஜே) உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத ஒரு பிரதமர்உள்ள நாட்டில், பத்திரிகை சுதந்திரமும், பத்திரிகையாளர்களின் மாண்புகளும் பறிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாகியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதல், ஒட்டுமொத்த விவசாய எழுச்சியின் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியே ஆகும். விவசாயிகளுக்கான முழக்கத்தோடு பத்திரிகை சுதந்திரத்திற்கான முழக்கத்தையும் உரத்து எழுப்புவோம்.