கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி எழுத வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கூறியுள்ளது அப்பட்டமான வரலாற்று மோசடி மட்டுமல்ல தொல்பொருள் ஆய்வுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.
மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழகத்தில் 3ஆம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரிகம் இருந்ததை வெளிக்கொணர்ந்தது. அதுமட்டுமின்றி சங்க இலக்கியம் துவங்கி தமிழ் இலக்கியங்களில் இருந்த தமிழர் வாழ்வில் தொன்மை மற்றும் இயற்கையோடு இயைந்த சமூக வாழ்வியல் குறித்த செய்திகளில் பொருண்மைச் சான்று களை வெளிக்கொணர்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய அகழாய்வுத்துறை இந்த ஆய்வின் மீது மண் அள்ளிப் போடுவதற்கு அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டது. இந்த அகழாய்வை முன்னின்று மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை நியாயமின்றி இடமாற்றம் செய்தது. அவர் இடத்திற்கு ஒன்றிய அகழாய்வுத்துறையால் நியமிக்கப்பட்டவர் கீழடியில் ஒன்றும் இல்லை என்று கூறி அக ழாய்வை முடக்கினார். ஒன்றிய அகழாய்வுத் துறையும் இந்த ஆய்விலிருந்து விலகிக் கொண்டது.
இந்த நிலையில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை அறிக்கையாக அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒன்றிய தொல்லியல் துறைக்கு அளித்திருந்தார். இந்த அறிக்கையை வெளியிடாது கிடப்பில் போட்டது மட்டுமின்றி தற்போது அந்த ஆய்வ றிக்கையைத் திருப்பி அனுப்பி திருத்தி எழுது மாறு ஒன்றிய அகழாய்வுத்துறை கூறியுள்ளது. ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் புறக்கணிப்பைத் தொடர்ந்து தமிழக அகழாய்வுத்துறை கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட அகழாய்வு பல்வேறு வரலாற்று உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. ஆனால் ஒன்றிய அகழாய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வு முடிவு களை திருத்தி தமிழ் மொழியின் தொன்மையை யும் தமிழர் வாழ்வியலின் தொடர்ச்சியையும் மூடி மறைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. இது அவர் களது வரலாற்று வன்மத்தை வெளிப்படுத்துகிறது.
இந்திய வரலாற்றை ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றி புராணப் புனைவுகளின் அடிப்படையில் எழுத முயல்வதோடு இந்திய நிலப்பரப்பின் பன்முகத் தன்மையை அழிக்க நரேந்திர மோடி அரசு முயல்கிறது. பொருநை நதிக்கரையில் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய அகழாய்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இன்னமும் கூட வெளியிடப் படவில்லை. தற்போது கீழடி குறித்த அகழாய்வை வெளிப்படுத்தும் உண்மைகளையும் அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வரலாற்றின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.