பொறுப்பேற்பது யார்?
நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே நடந்த கொடூரமான குண்டுவெடிப்பு, தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. 13 அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இது வெறும் பயங்கரவாத தாக்குதல் மட்டுமல்ல - இது நமது பாதுகாப்பு அமைப்பின் முழுமையான தோல்வியின் வெளிப்பாடு.
குண்டுவெடிப்பு என்பது மிகக் கீழ்த்தரமான, கோழைத்தனமான செயல். பயங்கரவாதிக ளுக்குச்சாதி, மதம், இனம் எதுவும் கிடையாது. அவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள். அப்பாவி மக்களைக் குறிவைக்கும் இந்த மிருகத்தனத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
அதே நேரத்தில், பாதுகாப்புத் தோல்வி குறித்து எழும் கேள்விகளுக்கும் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். “இந்தியாவின் பாது காப்பை என்னிடம் ஒப்படையுங்கள்” என்று மார்தட்டிக் கொண்ட மோடி தலைமையின் கீழ், தேசத்தின் தலைநகரின் இதயப் பகுதியில் எப்படி இந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பு குறைபாடு ஏற் பட்டது? உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தும் ஒன்றிய அரசு விழித்துக்கொள்ளாதது ஏன்?
தில்லியிலிருந்து வெறும் 60 கிலோமீட்டர் தொலைவில் நவம்பர் 10 அன்றுஃபரீதாபாத்தில் 350 கிலோ வெடிபொருட்கள், துப்பாக்கிகள், டைமர்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. சந்தேகத் திற்குரிய பயங்கரவாதி 3 மணி நேரத்திற்கும் மேலாக காரில் நிதானமாக அமர்ந்திருப்பதை சிசிடிவி காட்சிகள்காட்டுகின்றன. ஒரு மிக முக்கியப் பகுதியில், ஒரு கார் நீண்ட நேரம் நிற்பது காவல்துறைக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதது ஏன்? தில்லியின் பாதுகாப்பு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இன்றும் உள்ளது. மாநில அரசும் பாஜகவின் கையில்தான் இருக்கிறது.
2008 மும்பை தாக்குதலின்போதுஇதே பாஜக தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உடனே அனை வரும் பதவி விலக வேண்டும் எனக் கூறியது. மேலும் தேசிய செய்தித்தாள்களில் கருப்புப் பின் னணியில் சிவப்பு எழுத்துக்களுடன் “கொடூர பயங்கரவாதம் எப்போது வேண்டுமானாலும் தாக்குகிறது. பலவீனமான அரசாங்கம், கையா லாகாதது மற்றும் திறமையற்றது. தேசத்தைக் காக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்”என விளம் பரம் செய்தது இதே பாஜகதானே.
அன்றைய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர், மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பதவி விலகினர். அன்று பாஜக செய்த அதே விமர்ச னங்கள், விளம்பரங்கள் சரியானவை என்றால், இன்று அவர்கள் அதனைத் தங்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். தில்லி செங் கோட்டை கார் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்று யார் யார் பதவி விலகப் போகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதேசமயம், நமது பாதுகாப்பில் ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்யவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
