headlines

img

யாருக்காக ? இது யாருக்காக ?

யாருக்காக? இது யாருக்காக?

தேர்தல் ஆணையத்தை சிதைக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் ஆட்சியின் தோல்வியை மறைக்கவே எஸ்ஐஆருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றான தேர்தல் ஆணை யத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பது ஒன்றிய பாஜக கூட்டணி அரசுதான். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை மாற்றியது யார்? தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? இது தேர்தல் ஆணையத்தை பலப்படுத்தும் நடவடிக்கையா?

நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு பிறகு நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பெரும்பாலும் பாஜக ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள், அவர்களது சொல்படி நடப்பவர்கள் என்பது நாடறிந்த உண்மை. எதிர்க்கட்சித் தலைவரைக் கூட உண்மையாகக் கலந்து கொள்வதில்லை. மாறாக, தகவல் மட்டுமே சொல்லப்படுகிறது என்பதை பாஜகவால் மறுக்க முடியுமா?

இதுஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையம் குறித்தும், எஸ்ஐஆர் குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் சப்பைக் கட்டு கட்டி பதில் சொல்வதிலிருந்தே எஸ்ஐஆர் எனும் அபாயகரமான சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பீகாரில் முதன்முறையாக மேற்கொள்ளப் பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த  நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணை யத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டுபோனது. அங்கு 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மை யோர்-சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரண மாக இந்த எண்ணிக்கை சற்று குறைந்தாலும் கூட தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசிய மென்ன? தமிழ்நாட்டில் இந்த கணக்கெடுப்பில் ஏராளமான குளறுபடிகளும், குறைபாடுகளும் இருப்பது அன்றாடம் வெளிவந்து கொண்டி ருக்கிறது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பாஜக மற்றும் அதிமுக தரும் ஆதரவிலிருந்தே இதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ள கவலையை கருத்தில் கொள்ளும் என்று நம்புவோமாக!