மகாபாரதக் கதையில் பாண்டவர்களின் அஞ்ஞாதவாசத்தின் போது பீமன் அரக்கனை கொன்று அவனது கொடுமையிலிருந்து கிராம மக்களை காப்பாற்றுவான். தற்போதைய நிலையில் அகோரப் பசியுடன் இருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் இலக்கு வைத்து, நாள் குறித்து தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது மோடிஅரசு. நாட்டின் பாதுகாப்புத்துறையும் இதிலிருந்து தப்பவில்லை. அதனை எதிர்த்து பாதுகாப்புத் துறை ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்திட அறிவிக்கை கொடுத்திருக்கிறார்கள். அவர்களது போராட்ட அறிவிப்பு தேசத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகும்.
தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பு கொடுத்தால் அவற்றை அழைத்து பேச்சுவார்த்தைநடத்தி, போராட்டத்தை தவிர்க்க முயற்சிப்பதும் உடன்பாடு காண்பதுவுமே நல்ல அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடு. ஆனால் மோடி அரசோவேலைநிறுத்த தடை அவசரச் சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது. இது தேசபக்த செயலல்ல.ஏற்கனவே தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கான பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் வாழ்வில் மண்ணையள்ளிப் போட்டிருக்கிறது கார்ப்பரேட் கூட்டுக்களவாணி அரசான பாஜக அரசு. இப்போது தொழிலாளர்களின் வாழ்க்கையையல்ல; நாட்டின்பாதுகாப்பையும் குழிதோண்டிப் புதைக்கும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறது. எனவே இத்தகையதேச விரோத நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட்டு வேலை நிறுத்த தடை அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது.
இப்போது எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமே இருக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் தவிர. இப்படி இருக்கும் போதே ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளொரு விலையும்பொழுதொரு மதிப்புமாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களில் அந்நியநேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்கும் முடிவை ஒன்றிய அமைச்சரவை வியாழனன்று எடுத்துள்ளது. இந்த முடிவுஎண்ணெய் நிறுவனங்களை அப்படியே முழுவதுமாக ஒப்படைக்கும் வகையில், 49 சதவீதத்திலிருக்கும் உச்சவரம்பை நூறு சதவீதமாக மாற்றியிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.
அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்கில்தான் முதலீட்டு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் மோடிஅரசின் இந்த நடவடிக்கை கூட்டுக் களவாணிமுதலாளித்துவத்துக்கு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு - உலகளாவிய அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்கு படையல் செய்வதாகவே இருக்கிறது. பகாசுரக் கம்பெனிகளின் அகோரப் பசிக்கு இந்திய நிறுவனங்களை வாரி வழங்கும் மோடி அரசை எதிர்த்து நாட்டு மக்கள் வெகுண்டெழ வேண்டும். மக்கள் சக்தியே இவர்களை தடுத்து நிறுத்தும்.