headlines

img

கூட்டுக் கொள்ளைக்கு மீண்டும் அனுமதி...

ஒரு ஜனநாயக  நாட்டின் அடிப்படையே அதன் வெளிப்படைத் தன்மைதான். ஆனால் அதற்குமுற்றிலும் நேர்மாறாக இருப்பது  தேர்தல் நிதிப் பத்திரம். அதனை மீண்டும்  ஜூலை 1 ஆம் தேதி முதல்விற்பனைக்கு ஒன்றிய அரசு அனுமதித்திருக்கிறது.
தேர்தல் நிதி பத்திரம் திட்டத்தை 2017ல் மோடிதலைமையிலான பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அதில் ஆளும் அரசிற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் “கூட்டு கொள்ளைக்கு சட்ட அங்கீகாரம்’’ அளிக்கும் வகையில் பல்வேறு திருத்தங்கள்செய்யப்பட்டன. குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம், வருமான வரிச் சட்டம், நிறுவனங்க சட்டம்,வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டம்உள்ளிட்டவை திருத்தப்பட்டன.

அதில் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பெறும் நன்கொடைகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் கணக்கில் காட்டப்பட வேண்டும். கார்ப்பரேட்கள் தங்களது  நிகர சராசரி லாபத்தில் 7.5 சதவிகிதத்திற்கு மேல் அரசியல் கட்சிக்கு  நன்கொடை தரக்கூடாது. அதையும் வரவு செலவில் காட்ட வேண்டும். வெளிநாட்டிலிருந்து அரசியல் கட்சிகள்  நன்கொடை பெறக் கூடாது என்பது உள்ளிட்டமிக முக்கிய பிரிவுகளை  நீக்கியது மோடி அரசு.அப்போதே தேர்தல் ஆணையம்,  இந்திய ரிசர்வ் வங்கிமற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டகட்சிகள்  கடுமையாக எதிர்த்தன. அதையும் மீறியே நிதி மசோதா மூலம்பாஜக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

2014 ல் பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்புவெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்று சட்டத்தினை மீறியதற்காக பாஜக குற்றவாளிக் கூண்டில் நின்றது.  பிரிட்டனை சேர்ந்த  ஸ்டெர்லைட்-ன் வேதாந்தா குழுமத்திடம் ரூ. 3.5 கோடி நன்கொடை பெற்ற விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம்  பாஜக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்  அந்த பிரிவையே நீக்கியது. அந்த பிணைப்புதான் இன்றுவரை ஆட்கொல்லி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பாஜக கூஜா தூக்குகிறது. 

2018-19 ஆம் நிதியாண்டில் மட்டும்  தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்பரேட்களிடமிருந்து  பாஜக ரூ.1450 கோடி நன்கொடையாக பெற்றது. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக கார்ப்பரேட்களிடம் நன்கொடை வசூலிப்பதில் முதலிடத்தில் பாஜக இருக்கிறது. காரணம் சலுகைகளைப் பெற ஆளும் கட்சிக்கே கார்ப்பரேட்கள் அதிகமாக நன்கொடையை அளிக்கின்றன.  பாஜகவிற்கு அதிகமான நன்கொடை அளிக்கும் சீரம் நிறுவனத்திற்கே கொரோனா தடுப்பூசிஉற்பத்தியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மக்கள்கொத்துக்கொத்தாக உயிரிழந்த நிலையிலும்பொதுத்துறை நிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு சட்ட அங்கீகாரம்தான் தேர்தல் நிதி பத்திரங்கள்.  சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு மிகவும் அவசியம் சமமான வாய்ப்பு என்கிறது நமது அரசியலமைப்பு சட்டம். ஆனால் அதனை முழுமையாக நிராகரித்து குறுக்கு வழியில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது இந்த தேர்தல் நிதி பத்திரம். எனவே இது உடனே தடை செய்யப்பட வேண்டும்.