headlines

img

நரேந்திர மோடியின் கருணையிலா ஆட்சி...

பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று இன்றைய பிரதமரும் அன்றைய பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மேடைதோறும் நீட்டி முழக்கினார். ஆட்சிக்கு வந்ததும் அத்தனையும் காற்றோடு காற்றாகப் பறக்க விட்டுவிட்டார்.

ஆனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்மீதுதான் வரிகளைச் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறத்தாழ நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பெட்ரோல் விலை முந்நூறுக்கும் மேற்பட்ட நகரங்களில் நூறு ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலையும் நூறைத் தொட விரைந்து கொண்டிருக்கிறது.பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்று நிபுணர்கள் கூறுவதையும் சிறிதளவும்காதில் போட்டுக் கொள்ளாமலே அடம்பிடிக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இயல்பாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.மறுபக்கம் கொரோனா பெருந்தொற்று நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது சரியான நடவடிக்கைகள் எடுக்காத மோடி அரசு, தற்போது இரண்டாவது அலையின் போதும் அதைவிட மோசமாகவே நடந்து கொள்கிறது. ஊரடங்கு போன்றவற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வேலையிழந்து தவிக்கும் மக்களுக்கு நேரடி நிதி உதவியும் உணவு தானியங்களும் வழங்குவதற்கு மனமில்லாமலும் மனச்சாட்சி உறுத்தாமலும் இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் தொழில் துறையினருக்கு உதவுவதாக படாடோபமாக அறிவிப்புகள் தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்படுகின்றன.

மறுபுறத்தில் விலை உயர்வு விண்ணில்பறக்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு.ஜூலை மாதம் பிறந்ததோ இல்லையோ உடனே ரூ.25 உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில் 610 ரூபாயாக இருந்த எரிவாயு டிசம்பர் மாதத்தில் மட்டுமே 50, 50 ஆக நூறு ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனால்ஜனவரி மாதத்தை விட்டு விட்டு 2021 பிப்ரவரி மாதத்தில் 25, 50, 25 என மூன்று முறையில் நூறுரூபாய் உயர்த்தினார்கள். அத்துடன் விட்டார்களா? மார்ச் முதல் நாளே ரூ.25 உயர்த்தப்பட்டது.எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் கடும்எதிர்ப்பினாலும், தேர்தல் வேறு நடைபெறவிருந்தாலும்   வெறும் 10 ரூபாய் குறைத்து தங்களின் கருணை நெஞ்சத்தை வெளிப்படுத்தினார்கள். சரி தேர்தல் முடிந்தது, சும்மா இருக்கலாமோ? அதுதான் ஜூலை பிறப்பே ரூ.25 உயர்வோடு பிறந்திருக்கிறது. இதன் மூலம் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.850 என்றால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இன்னும் அதிமாகத்தானே இருக்கும். கடந்த ஏழு மாத காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 அதிகரித்துள்ளது. ஏழு மாதங்களுக்கு முன்பு ரூ.594 என்ற அளவில் இருந்த விலை தற்போது ரூ.834 முதல் 850 வரை அதிகரித்துள்ளது. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை ஆதாயம் என்று நினைக்கிற இந்த கருணையிலா ஆட்சி கடுகி ஒழியட்டும்.