தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் தங்களது புதிய அரசாங்கத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அமைப்பின் தலைவர் முல்லா பராதர், தலிபான் அமைப்பின் நிறுவனத் தலைவரான மறைந்த முல்லா உமரின்மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் அரசியல் பிரிவு மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஆகியோர் தலிபான்களின் அரசாங்கத்தில் முதன்மை இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. இவர்களது மதத் தலைவரான ஹைபத்துல்லா அகுந்ஜதா, மத ரீதியான விசயங்களில் இவர்களதுஅரசாங்கத்திற்கு வழிகாட்டுவார் என்று தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் பஸ்தூன் இனத்தவரின் முக்கியத் தலங்களில் ஒன்றான பாஞ்ச்சீர் பள்ளத்தாக்கு தவிர பிற பகுதிகள் அனைத்தும் தலிபான்களின் வசம் வந்துள்ளன. பாஞ்ச்சீரில், அங்குள்ள போர்க்குழுவின் தலைவர்களில் ஒருவரான அகமது மசூத்தின் படையினருடன் ஒரு பக்கம் மோதலும் இன்னொரு பக்கம் பேச்சு வார்த்தையும் தலிபான்கள் நடத்தி வருகிறார்கள்.ஒரு சில நாட்களில் காபூலில் அமையவுள்ள தலிபான்களின் அரசில் 25 அமைச்சகங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கு வதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.
சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தின் பிரதான சக்திகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தலிபான்கள், பயங்கரவாத அமைப்பு என்ற தங்கள் மீதான முத்திரையை எப்படியேனும் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கவனத்துடனும் நிதானத்துடனும் காய் நகர்த்துவது தெரிகிறது. ஆனால் அதேவேளையில் 1996 முதல் 2001 வரை இவர்கள் ஆப்கானிஸ்தானில், அரசாங்கம் தங்களது கைகளில் இருந்த காலக்கட்டத்தில், ஆடிய கொடிய ஆட்டத்தை ஆப்கானிய மக்களோ, உலக மக்களோ அவ்வளவு எளிதில்மறந்துவிடத் தயாராக இல்லை. அது ஒரு இருண்ட காலம். முகமது நஜிபுல்லா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியையும், கம்யூனிஸ்ட்டுகளையும், தலிபான்கள் கொடூரமாக வேட்டையாடிய காலம். அந்த வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக 1996ல் கம்யூனிஸ்ட் தலைவரும், மக்கள் ஜனநாயக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியுமான நஜிபுல்லாவை கொடூரமாக படுகொலை செய்து காபூலின் வீதிகளில் விளக்குக் கம்பத்தில் அவரது உடலை ஏற்றித் தொங்கவிட்டு, உலகத்தையே அதிரச் செய்த கொடுமையை; ஆப்கானிஸ்தானின் பெண்களை, பெண் குழந்தைகளை உரிமைகளற்றவர்களாக மாற்றிய அநீதியை; கல்வி நிலையங்களை, பல்கலைக்கழகங்களை தகர்த்து அழித்த பயங்கரத்தை ஆப்கானிய மக்கள் இப்போதும் எண்ணிப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கொடிய ஆட்சியை தங்களது புதிய அரசு தராது என்று ஆப்கானியமக்களுக்கு நம்பிக்கை அளிக்க தலிபான்கள் உண்மையிலேயே படாதபாடு பட்டு வருகிறார்கள். அண்டை நாடுகளின் பேச்சுவார்த்தையும் நிர்ப்பந்தங்களும் அதை உறுதி செய்யட்டும்.