ஈரான் மீது கை வைக்காதே!
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் மேகம் மிகத் தீவிரமாகச் சூழ்ந்திருக்கிறது. உலக அமைதிக்குத் தொடர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தத் துடிக்கும் அமெரிக்கா தலைமையிலான வல்லாதிக்க சக்திகளின் போக்கு கடும் கண்ட னத்திற்குரியது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீது தன்னிச்சையான பொருளா தாரத் தடைகளையும், ராணுவ அச்சுறுத்தல் களையும் ஏவுவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது மனிதாபிமானமற்ற கொடூரமும் ஆகும்.
ஈரான் மீதான விரோதப் போக்கு என்பது நேற்று இன்று தொடங்கியதல்ல. எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற நினைக்கும் ஏகாதி பத்திய நாடுகளும், பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் சக்திகளும் இணைந்து ஈரானை ஒரு நிரந்தர எதிரியாகச் சித்தரிக்கப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றன. கடந்த காலங்களில் இராக், லிபியா, சிரியா போன்ற நாடுகள் “ஜனநாயகம்” என்ற பெயரில் சிதைக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். அந்த வரிசையில் ஈரானையும் தள்ளிவிட்டு, அதன் வளங்களைச் சுரண்ட நினைப்பது ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியத்திற்கே ஈடு செய்ய முடியாத பேராபத்தாக முடியும்.
உலக எண்ணெய் இருப்பில் சுமார் 10% மற்றும் இயற்கை எரிவாயு இருப்பில் 15% கொண்டுள்ள ஈரான் மீது போர் தொடுப்பது உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும். குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20%க்கும் மேலாகக் கையாளும் ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) பகுதியில் ஏற்படும் பதற்றம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பீப்பாய்க்கு 150 டாலருக்கும் மேல் உயர்த்தக்கூடும். இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடுமையான விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் உண்டாக்கி, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும்.
ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போரினால் உலகப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டி ருக்கும் சூழலில், ஈரானுக்கு எதிரான மற்றொரு போர் உலகை ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளும். ஈரானில் நடப்பது முற்றிலும் உள்நாட்டுப் பிரச்சனை. அதுவும் தூண்டிவிடப்பட்டது என்ற விபரங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் ஈரான் அரசின் செயல்களை “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தும் நாடுகள், அதேபகுதியில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? இது ஒரு அப்பட்ட மான சர்வதேச இரட்டை நிலைப்பாடாகும்.
ஆயுத வியாபாரிகளுக்கும், போர் வெறி பிடித்த அதிகார மையங்களுக்கும் மட்டுமே போர் லாபத்தைத் தரும். ஆனால் உழைக்கும் மக்களுக்கு அது கண்ணீரையும் பிணக் குவியலையுமே பரிசாக அளிக்கும். உலக நாடுகள் தங்களின் சுயநல அரசியலை விடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலோடு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும்.
ஈரானின் இறையாண்மையைக் காப்போம்! ஈரான் மீது கை வைக்காதே என்று உரக்கச் சொல்வோம்!
