headlines

img

மிரட்டலுக்கு பணியக் கூடாது

ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. மீறி இறக்குமதி செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறது. இதற்கு ஒருபோதும் இந்தியா பணியக்கூடாது. இந்தியா ஒன்றும்அமெரிக்காவின் அடிமை நாடு அல்ல.2015ல் ரஷ்ய முன்முயற்சியில் வல்லரசு நாடுகள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டில் ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  அதன்பின்னர் 2017ல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் ஈரானுடன் ஒபாமா போட்ட ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்து மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதனை ஏற்க முடியாது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்கா மீண்டும்  ஈரானிடமிருந்து மே 2ம் தேதிக்கு பின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டியிருக்கிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்கா தனது அதிகார எல்லையை மீறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறது. இது இந்தியமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  


இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இறக்குமதி செய்கிறது. உலகிலேயே அதிகளவு கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்வதில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியா இருந்து வருகிறது. 2018-2019ம் நிதி ஆண்டில் மட்டும்ஈரானிடமிருந்து இந்தியா 2.4கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. இதுஇந்தியாவின் தேவையில் 11.3 சதவிகிதம் ஆகும்.ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்வதன் மூலம் பெரிய அளவில் போக்குவரத்து செலவு மிச்சமாகிறது. மேலும் டாலருக்குபதிலாக நேரடியாக இந்திய பணத்தை கொடுத்துவாங்குவதை ஈரான் ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமல்ல ஈரானும் நேரடியாக இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் அமெரிக்க நிர்பந்தத்திற்கு பணிந்து இந்தியா வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்தால், போக்குவரத்து செலவு பன்மடங்கு அதிகரிக்கும். டாலரில்தான் இறக்குமதி செய்ய முடியும். அதனால் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்மதிப்பும் சரியும். அதன் மூலம் பணவீக்கம் ஏற்படும். இறக்குமதி உயர்வால் வர்த்தக பற்றாக்குறையும் பன்மடங்கு உயரும். அதன் மூலம் இந்தியபொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். 


ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா பொருளாதாரதடையை தவிர, மற்ற எந்த நாடு விதிக்கும் பொருளாதார தடையை ஏற்க முடியாது என்றார். அந்த நிலையில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். அதுவே இந்திய நலன்களை பாதுகாக்கும்.