இராணுவ வீரர்களை உருவாக்கும் சைனிக் பள்ளிகளில் தனியாரை அனுமதிப்பது எனத் தொடங்கி அதில் 67% கல்வி நிறுவனங்களை சங்பரிவார் அமைப்புகள் தங்களது ஆக்டோபஸ் கரங்களால் விழுங்கியிருக்கின்றன.
“தீவிரமான சுய தம்பட்டம் கொண்ட தேச வழிபாடு மனித வரலாற்றின் இலக்கு அல்ல” என்பது தேசியவாதம் குறித்து நாட்டின் தேசிய கீதம் இயற்றிய மகாகவி இரவீந்திர நாத் தாகூர் சொன்னது.
இராணுவ சினிமாக்கள்
“இந்து தேசியமே, இந்தியாவின் தேசியம்” என்பதை நிரூபிக்க ஆர்.எஸ்.எஸ். பலவாறு முயன்று வருகிறது. அதில் முக்கியமான ஒன்று நாட்டின் இராணுவம். ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் பரிவாரங்களும் தேசத்தின் இராணுவத்தை கொண்டாடுவது என்பதில் இருந்து, அதனைக் கைப்பற்றுவது எனும் இடத்தை நோக்கி நகர்கின்றன. இராணுவம் தொடர்பான திரைப்படங் களைக்கூட தங்களது கருத்துக்களால் கைப்பற்ற முயல்கின்றனர்.
நாட்டின் இராணுவம் தொடர்பான வீர, சாகச மற்றும் அதன் தியாக உணர்வுகளைப் போற்றும் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்ற நிலையில், சமீபத்திய 5 வருடங்களில் குறிப்பிட்ட பிரிவினரை எதிரி களாக சித்தரிக்கும், காஷ்மீர் மக்களை குற்றவாளி கூண்டில் ஏற்றும் சினிமாக்களும், சிறுபான்மை எதிர்ப்பு என்ற பொது கண்ணோட்டமும், அதிகாரத் தால் அதனை திரிபு செய்து வெளியிடுவதும் அதி கரித்திருக்கின்றன. அப்படி தங்களுக்கு ஆதரவான சினிமாவாக சங்பரிவார அமைப்புகள் காண்பிக்க முயற்சிப்பதே தமிழில் தற்போது வெளிவந்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம்.
‘அமரன்’ சொல்வது என்ன?
இளைஞனான ஒருவனுக்கு நாட்டின் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டுமென்ற கனவும், அதை அடைவதும் அதற்கு மத்தியில் அவனது குடும்பம், காதல் மனைவி என்று வாழும் இயல்பான வாழ்க்கையினை திரைக்கதையாக வடிவமைத்திருக் கிறார்கள். இது இராணுவத்தில் பணிபுரிந்து மரண மடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையும் கூட. 2014-க்கு முன்பான காலகட்ட கதை என்றாலும்கூட படத்தில் தற்போதைய இந்துத்துவ கூட்டத்தின் சிந்தனைகள் ஆக்கிரமித்துள்ளன. இராணுவ வீரரின் தியாக வாழ்வை காண்பிக்கும் இத்திரைப்படத்தை வழக்கம்போல ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவினர் போற்றிப் புகழ்வது போல பாசாங்கு செய்து குறிப்பிட்ட மத பிரிவினருக்கு எதிராகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஜனநாயகத் தன்மைக்கு எதிராகவும் பிரச்சாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
சென்சார் போர்டாகும் பாதுகாப்புத்துறை
சினிமாக்களைப் பொழுதுபோக்கு அம்சங்கள் என்பதை தாண்டி அதில் சொந்த நாட்டு மக்களையும் (முஸ்லீம்கள்), மாநிலத்தையும் (தி கேரளா ஸ்டோரி) தேச அபாயங்களாக காண்பிப்பதும், அதை நாட்டின் பிரதமரே ‘புரமோட்’ செய்வதும் பாஜக ஆட்சியில்தான் நடக்கின்றது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இராணு வம் தொடர்பான திரைப்படங்கள் எடுத்தால் பாது காப்புத்துறை அமைச்சகத்திடம் No Objection Certificate வாங்க வேண்டுமென்று விதிமுறைகளை யும் மோடி அரசாங்கம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. இதன் நோக்கம் தங்களின் சித்தாந்தத்திற்கு தேவையான கருத்துக்களை அந்த சினிமாக்களில் புகுத்துவதுதான்.
இராணுவம் தொடர்பான சினிமாக்களைக் கட்டுப்படுத்தியவர்கள், இராணுவத்துறையையோ, வீரர்களையோ விட்டுவைக்கவில்லை. ‘ஜெய் பஜ்ரங் பலி, வெற்றிவேல் வீரவேல்’ என மத ரீதியான கோஷ ங்கள் வீரர்களிடையே திணிக்கப்பட்டன. இன்றைக்கு இராணுவ வீரர்களை தெய்வமாக பாவிக்கும் இதே சங்பரிவார கூட்டம் அந்த வீரர்களுக்கு வழங்கிய நவீன தாராளமய சன்மானமே‘அக்னிபாத்’ திட்டம்.
இராணுவத்தில் ஒப்பந்த பணி
சேவை மனப்பான்மையோடு தேசத்திற்காக பாடுபட இளைஞர்கள் இராணுவத்தில் இணைய விருந்த நேரத்தில் அவர்கள் தலையில் இடியென இறக்கியதே ‘அக்னிபாத்’. 4 ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணி. அதன்பிறகு எவ்வித ஓய்வூதியமோ, மருத்துவ உதவிகள் போன்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கான எந்த நலத்திட்டங்களும் கிடையாது. அக்னிபாத்தில் இணைந்த வீரர்களுக்கும், அதற்கு முன்பு இராணுவத்தில் இணைந்த வீரர்களுக்குமான இடைவெளி என்பது மலையளவு. பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கும் பட்ஜெட்டில் மொத்தமும் வீரர்களின் ஓய்வூதியத்திற்கும், சம்பளத்திற்கும் போய்விடுவதாலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மோடி அரசாங்கம் தெரிவித்தது. இராணுவ வீரர்களின் தியாகத்தைக் கொண்டாடு வதாகப் பிதற்றும் தேசப்பற்று குறித்து சங்கி கூட்டத்தின் தேசபக்த லட்சணம் இதுதான்.
மறுபுறம், ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகையின் ஆசிரியர் பிரபுலா கெட்கர், அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது என்பதோடு இந்தியாவின் குடிமக்கள் அனைவரும் இராணுவப் பயிற்சியை பெற்றிருப்பதே, தற்போது இஸ்ரேல் சந்திக்கும் பிரச்சனைகள் போன்று நம்நாட்டி லும் எதிர்காலத்தில் நிகழுமானால், அதனை எதிர்கொள்ள வசதியாக இருக்குமென இராணுவத்தை இந்துத்துவமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதே கருத்தை இந்து மகாசபா தலைவராக சாவர்க்கர் இருந்த காலத்தில் இருந்தே சங்பரிவாரங்கள் சொல்லி வருகின்றன. பிரிட்டிஷ் படையில் இணைந்து இந்து இளைஞர்கள் தங்களை இராணுவமயமாக்கி கொள்ள வேண்டும் என்று கூறிய இந்தக் கும்பல்தான் இன்றைக்கு தேசப்பாதுகாப்பு, தேசப்பற்று என மேடையில் நீட்டி முழங்குகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்சின் நீண்ட காலதிட்டம்
உண்மையில், ஆர்கனைசரின் ஆசிரியர் கூறும் நிலை என்பது இந்தியா வருங்காலத்தில் சந்திக்க போகும் மிக மோசமான நிலைமைக்கான அறிகுறியே. ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆயுதப்பயிற்சி பெற்ற வேலை இல்லா பட்டாளமாக வெளியேற்றப்படுவார்கள். இது ஆர்.எஸ்.எஸ்ஸின் சமூக வன்முறை திட்டத்திற்கு தேவையான ஒன்றாகவும் இருக்கின்றது. ஒரு குடியரசு நாட்டில் ஆயுதப்பயிற்சியில் தேறியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அந்நாட்டின் ஜனநாயகப் பண்புகள் மோசமடைவதோடு, அவை சிறுபான்மை - பெரும்பான்மை மோதலுக்கே இட்டுச் செல்லும். தங்களின் இந்நீண்டகால இலக்கினை நிறைவேற்றி அதனையே தேசத்தின் பாதுகாப்பு என, ஆர்.எஸ்.எஸ். மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை செய்து வருகின்றது.
‘அக்னிபாத்’துக்கு கிளம்பிய எதிர்ப்பு
பாஜக அரசாங்கம் அக்னிபாத் திட்ட விஷயத்தில் எதிர்கட்சிகளின் விமர்சனத்தை எதிர்கொண்டதைவிட, கடுமையான எதிர்ப்பினைப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மட்டத்திலேயே சந்தித்தது. அதன் உச்ச மாக இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற நரவனே, அக்னிவீர் திட்டத்தை விமர்சித்ததோடு அதன் பாதகமான அம்சங்களை தனது சுயசரிதை நூலில் எழுதியிருந்தார். அதில் “தற்போது இராணுவத்தில் இரண்டு வர்க்கங்கள் உள்ளன. ஒன்று சகல வசதிகளையும், எதிர்காலப்பலன்களையும் கொண்டிருக்கும் பிரிவு; இன்னொன்று எவ்வித பலன்களையும், வேலைப் பாதுகாப்பைக்கூட கொண்டிருக்காத பிரிவு. இது ஒரு ஆரோக்கியமான இராணுவத்திற்கு உகந்ததல்ல” என்கிறார்.
அக்னிவீர் திட்டத்தில் வீரர்களுக்கான பயிற்சி காலம் வெகு குறைவாகவும், திறனற்ற வீரர்களை ஊக்குவிப்பதாகவும், பணியின்போது இறப்பவர்களுக்கு உரிய இராணுவ மரியாதை மற்றும் பணப்பலன்கள் கிடைப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் துறைசார்ந்த மட்டத்திலேயே எழுந்துள்ளன. மேலும், இத்திட்டத்தில் அக்னி வீரர்களை தக்கவைக்கும் விகிதம் 25 சதத்திலிருந்து 50 சதமாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் இராணுவ தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இராணுவப்பள்ளிகளில் இந்துத்துவ அமைப்புகள்
இவற்றில் எந்த கோரிக்கையையும், பிரச்சனை களையும் காதில் போட்டுக் கொள்ளாத மோடி அரசு, இராணுவத்தை இந்துத்துவமயமாக்கும் திட்டத்தில் மும்முரமாக செயல்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக இராணுவ வீரர்களை உருவாக்கும் சைனிக் பள்ளிகளில் தனியாரை அனுமதிப்பது எனத் தொடங்கி அதில் 67% கல்வி நிறுவனங்களை சங்பரிவார் அமைப்புகள் தங்களது ஆக்டோபஸ் கரங்களால் விழுங்கியிருக்கின்றன. தேச நலன், தேசப்பாதுகாப்பு எனக் கூப்பாடு போடுகிற, இராணுவத்தினை வழிபாட்டு முறையாக்குகிறது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையில் செய்த அட்டூழியங்களே இவை.
இந்தியாவின் பாதுகாப்புக்காக தங்கள் வாழ்க்கை யை அர்ப்பணிக்கும் வீரர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிய ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல், அவர்களின் தியாக வாழ்க்கையினை, சந்திக்கும் பிரச்சனைகளை காண்பிக்க விரும்பும் கருத்துச் சுதந்திரத்தைக் கூட பறித்திருக்கிறது. இராணுவமே இந்துத்துவ மய மாகியிருக்கின்ற சூழலில் அதுதொடர்பான சினிமாக்கள் மக்களிடையே அதற்கான ஒப்புதலை பெறுவதற்கான கருத்துப் பிரச்சாரமாகவே அமை கின்றது. அதில் ஒன்றே ‘அமரன்’ சினிமாவும் கூட.
கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்க, நெல்லை மாவட்ட செயலாளர்