headlines

img

நீதி தேவதைக்குக் கண் திறப்பு... மாற்றுத் திறனாளிகளுக்கு அவமதிப்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் வருகிற மார்ச் 10-ஆம் தேதியுடன் ஓய்வு பெறப் போகிறார். அதற்கு முன்னால் அவசர அவசரமாக உச்ச நீதி மன்றத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை மாற்றிப் புது சிலையொன்றை திறந்து வைத்திருக் கிறார்.

கண்கள் கட்டப்பட்டு கையில் ஒரு வாளுடன் காணப்படுவதுதான் உலகெங்கும் நீதி தேவதையின் பொதுவான தோற்றம். ஆனால் புதிதாகத் திறந்த சிலையில் கண் கட்டு அவிழ்க்கப்பட்டு, கையில் வாளுக்குப் பதிலாக அரசமைப்புச் சட்டப் புத்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது!

புது விளக்கமும் எழும் கேள்வியும்

‘இந்தப் புதிய சிலை தேவைதானா?’ என்ற கேள்வியை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அதன் தலைவர் கபில் சிபல் வைத்திருக்கிறார்.

உடனே, ‘நீதி தேவதையின் கண்கள் திறந்திருக்க வேண்டுமென்றும், வாளுக்குப் பதிலாக சட்டப் புத்தகம்தான் பேசவேண்டுமென்றும்’ புதிய விளக்கம் கொடுக்கத் தொடங்கினார்கள். இந்த விளக்கத்துக்குப் பிறகு வேறு சில புதிய கேள்விகள் எழுந்துள்ளன. நீதிபரி பாலனம் செய்பவர்களுக்கு பார்வைத்திறன் அவ சியமா என்ற கேள்வி அதில் முக்கியமான ஒன்று!

மாற்றுத் திறனாளிகள் -  நீதிமன்றத் தீர்ப்புகள்

குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், தங்கள் முன்னால் நேரடி சாட்சிகள் வாக்குமூலம் அளிக்கும் போது அவர்களுடைய உடல் மொழியையும், பார்வைக் கோணங்களையும் பார்த்துப் பதிவு செய்வது வழக்கம். அதன் மூலம் ஒரு சாட்சி உண்மையைத் தான் பேசுகிறாரா என்று எடை போடுவார்கள். அதெல் லாம் ஒரு காலம். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நீதிபதி ஜக்காரியா யாகூப் தென்னாப்பிரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே பதவி வகித்திருக்கிறார்.  

மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ம் வருடம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பின்னரே மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பற்றிய புரிதல் அதிகமாகப் பேசப்பட்டது. அந்தச் சட்டத்தின் படி, ‘மாற்றுத்திறனாளிகள் எந்தெந்த பதவிகளை யெல்லாம் வகிக்கத் தகுதியானவர்கள் எனும் முடிவை  நிபுணர்கள் ஆலோசனைக்குழு ஒன்றின் மூலம் அரசுகள் அறிவிக்க வேண்டும்’ என்ற விதி உள்ளது.  இந்திய ஆட்சிப் பணியில் சேருவதற்காக ஒன்றிய அர சுப் பணியாளர் தேர்வு ஆணையம்(UPSC) நடத்தும் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 1993-இல் வழங்கியது.

ஆனால், நீதித்துறையில் பார்வை மாற்றுத் திறனாளி நீதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என்ற விதி தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதற்கெதிராகப் போடப்பட்ட வழக்கில் (2009) ‘பார்வை மாற்றுத்திறனாளிகளை நியமிக்கலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தமிழ்நாடு நீதித்துறையில் உரி மையியல் நீதிபதியாக தற்போது ஒருவர் பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், தில்லி மாநில உயர் நீதிமன்றங்களும் நீதித்துறை நடுவர் பதவிக்கு பார்வை மாற்றுத்திறனாளிகள் மனுச் செய்யலாம் என்று தீர்ப்பளித்தன.

தலைமை நீதிபதிக்குப் புரியும்

தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வும் கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நீதித்துறை நடுவர்  பதவிக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அனு மதி மறுத்ததற்குத் தடை வழங்கி உத்தரவிட்டது. நீதிபதி சந்திரசூட் பதவியேற்ற சில மாதங்களில் கேரளா விலிருந்து வந்த பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் ஒருவரை உச்ச நீதிமன்றத்தில் வாதாட அனுமதித்தார். அவர் சைகை மொழியில் செய்த வாதத்தை மொழிபெயர்த்து நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக ஒரு சைகை மொழி நிபுணரை நீதி மன்றம் நியமித்தது. இது இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வு. தனிப்பட்ட முறையிலும் அவர் தத்தெடுத்துக் கொண்ட இரு பெண்களும் மாற்றுத்திறனாளிகளே. எனவே, அவ ருக்கு மாற்றுத்திறனாளிகள் பிரச்னை நன்றாகவே புரியும்.

நீதித்துறையில் மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகள் செயல்பட முடியாது என்ற வாதம் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1986-ஆம் வருடம் பார்வை மாற்றுத்திறனா ளியான சதன் சந்திர குப்தா என்பவர் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இன்றும் வழக்கு மன் றங்களில் பல மாற்றுத்திறனாளி வக்கீல்கள் பணி புரிந்து வருகின்றனர்.

புதிய சாட்சியச் சட்டத்தில்

இந்திய சான்றியல் சட்டத்தில் 118-ஆவது பிரிவில் நீதிமன்றத்தின் முன்னால் யாரெல்லாம் சாட்சி யளிக்கலாம் என்ற பட்டியலில் குழந்தைகள், மிகவும் வயதானோர், நோயினால் பீடிக்கப்பட்டோர், மற்றும் உடல் அல்லது உள்ளத்தினால் கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலளிக்க முடியாதோர் மட்டுமே நீக்கப் பட்டுள்ளனர். 119-ஆவது பிரிவில் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் தங்கள் பதில்களை எழுத்து மூலமாகக் கொடுக்கலாம் அல்லது சைகை மொழியில் பேசினால் அதை மொழிபெயர்த்துச் சொல்வதற்கு சிறப்புக் கல்வி பெற்றவர்களை நீதிமன்றம் நியமிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது புதிதாகக் கொண்டுவரப்பட்ட பாரதீய சாட்சியச் சட்டத்தில் இவை 124 மற்றும் 125-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

எத்தகைய திறன்படைத்தவர் சாட்சி கூறினா லும் நீதிமன்றங்கள் பொய்சாட்சிகளை ஏற்றுக்கொள்வ தில்லை. விசாரணையில் தினசரி பொய்சாட்சிகளை வெறுத்து தனது முன்சீப் பதவியை விட்டு ஓய்வு பெற்ற மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை தன்  பதவித் துறப்புக்கான காரணத்தை ஒரு செய்யுளா கவே பாடினார்.

“போதும் போதும் உத்தியோக கனமே - இதில்            
ஏது சுகம் நமக்கு மனமே... 

என்கிறார் அவர்.

கண்கட்டும் கை வாளும்

உலகம் முழுதும் நீதி தேவதையின் கண்களை மூடிதான் வைத்திருக்கிறார்கள். நீதி கேட்டு வருப வர்களை நேரில் பார்த்தால் சபலம் ஏற்படலாம். எனவே யார் முன்னே வந்தாலும் நீதி ஒன்றுதான் என்ப தற்காகத்தான் அந்தக் கண்கட்டு. அவள் கையி லிருந்த வாள் எந்த சக்தியையும் எதிர்த்து நீதியை நிலைநாட்டுவதற்கு தேவை என்பதைத்தான் பாரதி தன்னுடைய கவிதையில் இப்படிப் பாடினான்...  

“நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்….
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி”

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலை மேலைநாட்டு தேவதை உரு வத்தில் இல்லாமல் இந்தியப் பெண் கடவுள் போல் உருவாக்கப்பட்டுள்ளது. அது மகாலட்சுமியா அல்லது சரசுவதியா என்பது அவரவருடைய கற்பனைக்கு உட்பட்டது.

சிறப்பு விடுப்பு அளிக்கும் வழக்குகள்

உச்ச நீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளி நாட்களில் மட்டுமே சிறப்பு விடுப்பு அளிக்கும் வழக்குகள் (Special Leave Petition) விசாரிக்கப் படும். அந்த இரு நாட்களில் ஒவ்வொரு அமர்வும் சுமார் 75 அனுமதி வழக்குகளில் உத்தரவிடுவார்கள். வழக்கை கூப்பிடும் நேரத்திற்குள்ளேயே ஒரு வார்த்தை உத்தரவும் அளிக்கப்பட்டுவிடும். வழக்கறி ஞர்கள் மூன்று நிமிடத்திற்குக்கூட பேசுவதற்கு நேரமி ருக்காது. ஆனால் அவ்விரு நாட்களிலும் பல வழக்கு களில் ஆஜராவதற்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுக்கு அன்றுதான் லட்சுமி கடாட்சம். எனவே அந்த இரு தினங்களும் ‘மகா லட்சுமி தினங்கள்’ என்று அறியப்படும்.

ஆனால், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் மூன்று நாட்களில் இறுதி வழக்குகள் பட்டியலிடப் படும். ஒவ்வொரு அமர்விலும் ஓரிரு வழக்குகள் மட்டுமே இறுதி விசாரணையில் முடிவு கட்டப்படும்.  ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து முன்னோ டித் தீர்ப்புகளை நீதிமன்றத்தில் வாதாடும்போது வக்கீல்கள் ஓரிரு வழக்குகளில் மட்டுமே ஆஜராக முடியும். படிப்பு தேவதையான சரசுவதியை குறிப்பி டும் வகையில் அந்த மூன்று தினங்களும் ‘சரசுவதி தினங்கள்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.

லட்சுமியா? சரசுவதியா?

தற்பொழுது திறக்கப்பட்டுள்ள கண்கட்டு அவிழ்க் கப்பட்ட பெண் தெய்வம் மகாலட்சுமியா (அ) சரசு வதியா என்பதை தலைமை நீதிபதி விளக்கினால் வழக்காடிகள் சந்தோஷப்படுவார்கள். யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப் பட்ட இந்த முடிவு யாருக்கும் சந்தோஷம் அளிக்க வில்லை. கண் பார்வைக்கு அப்பாற்பட்டு ஞானக்கண்  என்ற ஒன்றுடன் முக்கண்ணனாக சிவபெருமானை உருவகப்படுத்துவார்கள். அதேபோல நீதிபதிக ளுக்கு ஞானக்கண் மட்டுமே தேவை என்பதை தலைமை நீதிபதி உணருவாரா?

இன்றைய நாகரீக சமூகத்தில், ‘நீதி தேவதைக்கு கண் பார்வை தேவை’ என்றும் வலியுறுத்தும் வாதத்தை நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் செயலாகத்தான் கருத முடியும்!