ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெற்றது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு-சிஐடியு) தொடுத்த வழக்கில் தேர்தலை நடத்தா விடில் ரயில்வே வாரியத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த பின்னரே சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பை நடத்த ரயில்வே ஒப்புகொண்டது. இந்த தேர்தலில் டிஆர்இயு தலைமையிலான அணிக்கும்; காலம் காலமாக அங்கீகாரம் என்ற பெயரில் ஊழலில் திளைத்துக் கொண்டிருந்த எஸ்ஆர்எம்யூ எனப் படும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனுக்கும் இடையே தான் முக்கியப் போட்டி நிலவியது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதலே மாற்றம் தேவை என்ற மனநிலை அனைத்து தொழிலாளர்கள் மத்தியில் நிலவியது. இதன் காரணமாக என்.கண்ணையா தலைமையிலான மஸ்தூர் யூனியன், தொழிலாளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தது. மஸ்தூர் யூனியனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று பல இடங்களில் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டனர். அத்தனை மிரட்டல் உருட்டல்களையும் புறந் தள்ளிவிட்டு தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் டிஆர்இயு சங்கத்திற்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். எஸ்ஆர்எம்யூ வெறும் 107 வாக்குகள் வித்தியாசத்திலேயே, தப்பிப் பிழைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் டிஆர்இயு பெற்றுள்ள வெற்றி சாதாரணமானதல்ல. மத்தியில் எந்த ஒரு அரசு வந்தாலும் அந்த அரசுடன் சமரச போக்கு டன் நடந்துகொண்டு அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொண்ட சங்கம் தான் மஸ்தூர் யூனியன். சங்க அங்கீகாரம் இழந்திருந்த காலத்திலும் கடந்த பல ஆண்டுகளாக டிஆர்இயு, ரயில்வே தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதியாக நிர்வாகத்துடனும் நீதிமன்றங்களிலும் வாதாடியது. போராடியது.
புதிய பென்ஷன் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஒன்றிய அரசின் ஏமாற்று வேலையை தொழிலாளர்களுக்கு புரிய வைத்து அதற்கு எதிராக அணிதிரட்டியது. ரயில்வே பணிகளை ஒப்பந்தம் என்ற பெயரில் அவுட்சோர்சிங் விடுவதை எதிர்த்தும் ஊழியர்களை தன் விருப்பத் திற்கு ஏற்றார் போல் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்வதை எதிர்த்தும் கடுமையாக போராடியது. ரயில்வே துறையை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் நாசகர திட்டங்களை ஊழியர்களுக்கு புரிய வைத்ததோடு நிர்வாகத் திற்கு ஆதரவாக செயல்படும் மஸ்தூர் மற்றும் சங் யூனியன் நிலைபாடுகளையும் அகில இந்திய அளவில் ஏஐஆர்எப், என்ஐஎப்ஆர் சம்மேளனங் களின் துரோகத்தையும் அம்பலப்படுத்தியது.
ஆயிரக்கணக்கான தற்காலிக தொழிலாளர் கள் நிரந்தப் பணியை பெறவும் பயிற்சி முடித்த 5ஆயிரம் தொழில்பழகுநர்களுக்கு தெற்கு ரயில் வேயிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதர ரயில்வே மண்டலங்களிலும் நிரந்தரப் பணி கிடைக்கவும் போராடிய சங்கம் டிஆர்இயு. அந்த மாபெரும் பணியை அங்கீகரித்துள்ளனர் ரயில்வே தொழிலாளர்கள்.