ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடுஏற்பட்டது. பதுக்கல் காரணமாக கள்ளச்சந்தையில் இந்த மருந்து பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இந்த மருந்து இலவசமாகவே செலுத்தப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருந்து கிடைப்பதில்லை. மருத்துவர்களின் பரிந்துரை நோயாளிகளின் உறவினர்களை பதற்றப்படுத்துகிறது.
இந்த மருந்து தற்போது சென்னையில் மட்டுமே அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தமருந்தை வாங்குவதற்காக தமிழகம் முழுவதுமிருந்து நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் குவியும் நிலை உள்ளது. காலை முதல் காத்திருந்தாலும் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில்லை. நீண்ட வரிசையில் ஒருசில நாட்கள் காத்திருந்து இந்த மருந்தைப் பெற வேண்டியுள்ளது என்று புகார் எழுகிறது. மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் இதனால் பெரும் அலைக்கழிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
எனவே தமிழக அரசு இந்த மருந்து விற்பனையை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உடனடியாக துவக்குவதோடு தட்டுப்பாடில்லாமல் தேவைப்படும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் தேவைப்படாது என்றும் இது கொரோனா சிகிச்சைக்கு தவிர்க்க முடியாத ஒன்றுஅல்ல என்றும் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அது உண்மை எனில் தனியார்மருத்துவமனைகள் இவ்வளவு பேருக்கு இந்த மருந்தை பரிந்துரை செய்வது ஏன்? இந்த விசயத்தில் மக்களினுடைய அச்சத்தை போக்கும்வகையில் உரிய விளக்கம் அளிப்பது அரசு மற்றும் மருத்துவ நிபுணர்களின் பொறுப்பாகும்.
மறுபுறத்தில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பலருக்கு தயக்கம் இருந்தாலும் தற்போதுஇரண்டாவது அலையின் தீவிரத்தால் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். ஆனால் தடுப்பூசி கிடைப்பதில்லை என்பதுதான் இப்போது பிரச்சனையாக எழுந்துள்ளது.முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த தவணையை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட மருத்துவமனையில்தான் மீண்டும் போட வேண்டும் என திருப்பி அனுப்பப்படுகின்றனர். முதல் தவணை தடுப்பூசிபோட்டுக் கொள்ள செல்பவர்களும் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. இதனால் மக்களிடம் தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது. எனவே தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை மத்திய அரசு ஏற்பாடு செய்வதோடு அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.