headlines

img

வழிபாட்டின் மூலம் வழி காண முடியுமா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் கூறி யுள்ள ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திர சூட்டின் பூர்வீக கிராமத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாராட்டு விழாவில் பேசிய அவர், “அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு மூன்று மாதங்களாக என் முன் விசாரணையில் இருந்தது. அப்போது கடவுளின் முன் அமர்ந்து இதற்கு தீர்வு கிடைக்க வழி வகை செய்யு மாறு வேண்டினேன். நான் தினமும் கடவுளை  வழிபடுவேன். கடவுள் மீது நம்பிக்கையுடைய வர்களுக்கு அவர் சிறந்த தீர்வுகளைத் தரு வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் காப்பா ளர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சந்திரசூட்டின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை குறித்து யாருக்கும் கேள்வி இல்லை. 

இந்திய குடிமக்கள் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றவும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றா மல் இருப்பதற்கான உரிமையையும் நமது அர சியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால் இந்திய  நீதித்துறை வரலாற்றில் மிகவும் சிக்கலான, நீண்ட  காலம் நடந்து வந்த ஒரு வழக்கில் கடவுள் வழி பாட்டின் மூலம் தீர்வு கண்டதாக உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர் கூறி யிருப்பது ஆட்சேபணைக்குரியது; அபாயகரமானது. 

இப்படி ஒவ்வொரு நீதிபதியும் தாங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு வியாக்கியானம் அளிக் கத் துவங்கினால் அரசியல் சாசனம் எதற்கு என்ற கேள்வி எழாதா? நீதிபதி பொறுப்பில் இருப்பவர் கள் அரசியல் சாசன வரம்புகளுக்கு உட்பட்டு, சட்ட நியாயங்களின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டுமேயன்றி, ஒரு தனி மனிதரின் வழிபாட்டு முறையை தீர்ப்புக்கு மேற்கோளாகக் காட்டுவது முற்றிலும் பொருத்தமற்றது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர் எஸ்எஸ் - பாஜக - விஎச்பி பரிவாரத்தால் இடிக்கப் பட்டது. உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழியையும் மீறி இந்த அடாத செயல் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது. 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்பேயன்றி, நீதியல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. இந்நிலை யில் தீர்ப்பு வழங்கிய அமர்வாயத்தில் இடம் பெற்றிருந்த டி.ஒய்.சந்திரசூட் கடவுளை வழங்கி தீர்வு கண்ட தாக கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. நீதித்துறை யின் புனித நூல் அரசியல் சாசனம் மட்டுமே என்பதை உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் உணர்ந்திருப்பது நல்லது.