headlines

img

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் : அச்சமூட்டும் போக்கு

இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் பத்திரிகை சுதந்திரம் மோடி ஆட்சியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகை யாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், கைதுகள் என பல்வேறு வடிவங்களில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய பத்திரிகையாளர் கூட்டணியும் (NAJ), டெல்லி பத்திரிகையாளர் சங்கமும் (DUJ) வெளி யிட்டுள்ள அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

‘தி காரவன்’ பத்திரிகைக்கு எதிராக இந்திய  பத்திரிகை கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. “ராணுவ முகாமிலிருந்து கேட்கும் அலறல்கள்” என்ற கட்டுரைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அந்தக் கட்டுரையை திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், சில மாதங்கள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. தன்னை “பல்லற்ற புலி” என்று கூறிக்கொள்ளும் பத்திரிகை கவுன்சில், அரசின் கைப்பாவையாக செயல்படுவது வருத்தமளிக்கிறது.

இரண்டாவதாக, உத்தரப்பிரதேசத்தில் நடந்த பஹ்ரைச் கலவரத்தை செய்தி ஆக்கிய பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. பாஜக எம்எல்ஏ ஷலப் மணி திரிபாதி, யோகி ஆதித்யநாத்தின் முன்னாள்  ஊடக ஆலோசகராக இருந்தவர், எக்ஸ்  (டுவிட்டர்) தளத்தில் முஸ்லிம் பத்திரிகை யாளர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்களது செய்திகள் பாரபட்சமானவை என்று  குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதே கலவரத்தை பிற மத பத்திரிகையாளர்களும் அதே விதமாகத்தான் செய்தி ஆக்கியுள்ளனர் என்பதை அவர் முற்றிலும் புறக்கணித்துள்ளார். பத்திரிகையாளர்களை மத அடிப்படையில் வகைப்படுத்தி தாக்குவது என்பது மிகவும் ஆபத்தான போக்கு.

மூன்றாவதாக, தெலங்கானாவில் தெலுங்கு ஸ்க்ரைப் சேனலுக்காக செய்தி சேகரிக்கும் கவுதம் போதகோனி கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு விவசாயி முன்னாள் முதல்வர் கே.சந்திர சேகர் ராவை பாராட்டி, தற்போதைய முதல்வர்  ரேவந்த் ரெட்டியை விமர்சித்ததை வீடியோ  எடுத்ததற்காக அவர் மீது நான்கு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, கருத்து சுதந்தி ரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்.

அனைத்து நிகழ்வுகளையும் செய்தி ஆக்குவது பத்திரிகையாளர்களின் அடிப்படை  கடமை. அதற்காக அவர்களை அச்சுறுத்துவதோ, கைது செய்வதோ சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு.

அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாட்டில் ஜனநாயகமும் இல்லை என்பதை உணர வேண்டும்.