சாதி அரசியல் என்ற பெயரில் சிலர் அமைதி யைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவரது பேச்சு மிகவும் மோசமானது. பிளவு வாத அரசியலில் மிக நுட்பமான மொழி அவரு டையது. இவர் ஏதோ அமைதியின் தூதுவர் போல இப்படி பேசியிருக்கிறார்.
மோடியை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரிவாரத்தினர் இன்றும் சனாதன தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பது வருணாசிரமம் எனும் நால்வருண சாதியக் கட்டமைப்பு தானே. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்த கேடுகெட்ட சாதி முறையை பாதுகாக்கத் தானே இவர்கள் துடிக்கிறார்கள்.
சாதிப் பிரிவினைகளையும் சாதியக் கட்ட மைப்பையும் பாதுகாக்கவே பாஜக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வருகிறது. அதன் கல்விக் கொள்கை கூட பழைய குலக் கல்வி திட்டத்தைப் போல பாதி நேரம் படிப்பு மீதி நேரம் தொழில் பழகல் (கற்றுக் கொள்ளல்) என்று கூறுகிறது. கடந்தாண்டு கொண்டு வந்த விஸ்வ கர்மா திட்டம் கூட சாதி அடிப்படையி லேயே தொழிலுக்கு கடனுதவி செய்வதாகவே அமலாகிறது. இன்னும் சொல்லப் போனால் இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களுக்காகத்தானே 10 சத வீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது.
இப்படி எல்லாமே சாதியக் கண்ணோட் டத்துடன் செய்து கொண்டு, எதிர்க்கட்சிகள் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறினால் அதை சாதி அரசியல் என்று சாடுவதை என்ன வென்பது? தேர்தல் காலம் வந்தாலே சாதி அடிப்ப டையிலான அணி திரட்டலையும் விருது வழங்க லையும் கலவரத்தைத் தூண்டுவதையும் செய்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து சாதி அரசியல் செய்வதாகக் கூறுவது நகைப்புக்குரியது.
பாஜகவின் சாதி அரசியலுக்கு பற்றி எரியும் மணிப்பூர் அண்மைக் கால சாட்சியல்லவா? குக்கி பழங்குடியினருக்கு எதிராக மெய்டெய் மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை மூலம் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் பாஜக, அங்கு சென்று அமைதியை ஏற்படுத்த முடியாத - ராஜதர்மத்தைக் கூட கடைப்பிடிக்காத பிரதமர் மோடி மணிப்பூரில் அமைதியைச் சீர்குலைப்பவர் என்றால் தவறாகுமா? சாதி நூறு சொல்லுகின்ற சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கிறவர்களுக்கு அப்படிக் கூறும் அருகதை உண்டா? பிராமணர்களை பாதுகாக்க சட்டம் வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் பாஜக பரிவாரங்களின் மூலவரான மோடி சாதி அரசியல் என்று பேசலாமா? இவர் என்ன அமைதியின் தூதுவரா? சீர்குலைவு தானே இவர்களின் வேலை! சமூகத்தின் அடித் தட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் எதிரிகள் தானே இவர்கள்!