ஆர்எஸ்எஸ் தலைவரின் அளப்பு
“இந்து சித்தாந்த நூல்களில் தீண்டாமை போதிக்கப்படவில்லை; உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் கிடையாது; இது சிறிய வேலை, இது பெரிய வேலை என்று தெரிவிக்கப்படவில்லை; மற்றவர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்ப்பது அதர்மமாகும்; அது கருணையற்ற நடவடிக்கையாகும்” என்றெல்லாம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளந்துவிட்டுள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “உணவுப் பழக்க வழக் கங்களைப் பின்பற்றுவதே தற்போது மதம் ஆகி யுள்ளது” இவ்வாறு பின்பற்றப்படுவது விதிமுறை களாகத்தான் இருக்குமே தவிர சித்தாந்தமாக இருக்காது; மதம் என்பது சித்தாந்தமாகும்” என்றெல் லாம், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல பால் வடியப் பேசியுள்ளார்
ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் தான் பசுக் குண்டர்களாக மாறி பசு மாமிசம் சாப்பிடு பவர்கள் என்று கூறி பட்டியலினத்தை சேர்ந்த வர்கள் மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய மக்க ளுக்கு எதிராக வெறுப்பரசியலை வளர்த்து வரு கிறார்கள். இதை காரணம் காட்டி பல கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அதை கூச்சமின்றி நியாயப்படுத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்தான் இவர். மாமிச உணவு மற்றும் மரக்கறி உணவு என்பது அவரவர்களுடைய விருப்பத் தேர்வு. ஆனால் மாமிச உணவு சாப்பிடுபவர்கள் இந்துக் களே அல்ல என்று பல முறை ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர்.
ஆனால் இப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மாற்றிப் பேசுகிறார். உணவு மட்டுமல்ல, உடையும் கூட இங்கே பிரச்சனையாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் கிடையாது என்று இவர் பேசுகிறார். ஆனால் அவரவருடைய குலத்தொழிலைச் செய்வதுதான் தர்மம் என்று பேசுவதும் இவர்கள்தான். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோ சனைப் படி உருவாக்கப்பட்டுள்ள குலக்கல்வி முறை சாதியப் படிநிலையை தக்க வைக்கும் நோக்கமுடையது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டு தலின் கீழ் செயல்படும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு விஸ்வகர்மயோஜனா என்ற பெயரில் குலக்கல்வியை ஊக்குவிக்கிறது. அவரவர் குடும்ப அல்லது குலத்தொழிலைச் செய்பவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. அவரவர் தொழி லை அவரவர் செய்ய வேண்டும் என்ற மநு அநீதிதான் இங்கே மறைமுகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
ஒருவர் தான் தேர்வு செய்த மதத்தைப் பின்பற்றி பிற மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறுகிறார். ஆனால் மதம் என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக் கப்படுகிறது. அதன் பின்பு ஒருவர் தன்னுடைய விருப்பத் தேர்வாக மதத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை அரசியல் சட்டம் வழங்கு கிறது. ஆனால் மத மாற்றத் தடைச்சட்டம் அதற்கு எதிராகவே உள்ளது. சொல் ஒன்று செயல் வேறு என்பதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அதைத்தான் மோகன் பகவத்தும் அடிபிறழாமல் செய்து வருகிறார்.