மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபிறகு முதன்முதலாக கூடிய சம்யுக்த கிசான் மோர்ச்சா, ஞாயிறன்று மாலை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வேண்டும்; 2020-21 மின்சார திருத்தச்சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியிருப்பதோடு; விவசாய அமைப்பு களின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரிவாக விவாதிக்க வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 26 அன்று துவங்கிய விவ சாயிகளின் பேரெழுச்சி, துவக்கம் முதலே மேற் கண்ட கோரிக்கைகளையும் சேர்த்தே வலியுறுத்தி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலை என்பதை, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்த அடிப்படையில், அனைத்து விவ சாய விளை பொருட்களுக்கும் அவற்றின் ஒட்டு மொத்த உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 சத வீதம் விலை வைத்து நிர்ணயிக்க வேண்டும் என சம்யுக்த கிசான் மோர்ச்சா, தனது போராட்டக் களத் தில் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளது. இதைப் பற்றி பேசுவதற்கு மோடி அரசு இப்போதும் தயாராக யிருக்கிறதா என்பது தெளிவாகவில்லை.
தில்லி தகவல்களின்படி, ஒன்றிய அமைச்ச ரவை நவம்பர் 24 அன்று கூடி மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதலை வழங்கும் என்றும், நவம்பர் 29 அன்று கூடுகிற நாடாளுமன்ற குளர்கால கூட்டத்தொடரில், மேற்கண்ட சட்டங்களை ரத்து செய்வதற்கான முன்மொழிவு எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தெரிகிறது. எனினும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட இதர கோரிக்கைகளை அமைச்ச ரவை பரிசீலிப்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்தநிலையில் அரசின் நகர்வு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே விவசாயிகள் போராட்டத்தின் திசை தீர்மானிக்கப் படும் என்பது தெளிவாகிறது.
“சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லாமல், விவசாயி களால் வாழவே முடியாது. நாடு முழுவதும் விவசாயி கள் தற்கொலை செய்வதற்கான முதன்மையான காரணங்களில் இதுவும் ஒன்று” என்று குறிப்பிடுகிற சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்களில் ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளருமான ஹன்னன் முல்லா குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும்.
தங்களது இலக்கு என்ன என்பது இந்திய விவசாயிகள் வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது என்பதை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சனை மூன்று வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல; அவற்றை ரத்து செய்வது மட்டுமே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது. அதை அரசுக்கு உணர்த்தும் விதமாகவே லக்னோவில் லட்சக்கணக்கான விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூடியிருக்கிறது. நவம்பர் 26அன்று நாடு முழுவதும் ஓராண்டு நிறைவுப் பேரணிகளும் நவம்பர் 29அன்று நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணி வகுப்பும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
தப்பிச் செல்ல முடியாது மோடி அரசு.