headlines

img

தேவை விழிப்புணர்வு!

வளர்ந்து வரும் தகவல்தொழில்நுட்ப உலகில் இணையமின்றி எதுவும் இயங்காது என்ற நிலை உருவாகி வருகிறது. மறுபுறம் அதற் கேற்ப இணையவழி மோசடிகளும், குற்றங்களும்  அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இணையவழி குற்றங்கள்  அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 10 ஆவது இடம். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அள வில் 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களி லேயே இணைய மோசடிகளின் அளவு பன் மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது 7  லட்சத்து 40 ஆயிரத்து 957 புகார்கள் பதிவாகியி ருக்கிறது. இதன் மூலம் ரூ. 7 ஆயிரத்து 61 கோடி திருடப்பட்டிருக்கிறது. 

இது கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கும் இணையவழி மோசடிகளோடு (சைபர் மோசடி) ஒப்பிட்டால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டி ருப்பதை பார்க்க  முடியும். 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 26,049 சைபர் குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. அது 2022 இல் 9,56,970 ஆகவும் 2023 இல் 15,56,215 ஆகவும் உயர்ந்தது.  2024 இல் முதல் 4 மாதங்களில் மட்டும் 7,40,957 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் பதிவு செய்யப்படாத புகார்களின் எண்ணிக்கை யையும் சேர்த்தால் இன்னும்  எவ்வளவு அதிகமா கும் என்று தெரியாது.

2023ஆம் ஆண்டில் 4 லட்சத்து 70 புகார்க ளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மட்டும் ரூ.1200 கோடி மோசடி கும்பலிடமிருந்து பாதுகாக் கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரி வித்திருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் திரு டப்பட்டிருக்கிறது என்ற விபரம் இல்லை. சைபர் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி நடை பெறும் மாநிலங்களில்தான்  அதிகளவில் சைபர் மோசடிகள் நடைபெறுகின்றன. 2023 இல்  1,97,547 சைபர் மோசடிகளுடன்  உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், 1,25,153 சைபர் மோசடிகளுடன் மகாராஷ்டிரா இரண்டாமிடத்தையும், 1,21,701 மோசடிகளுடன் குஜராத் மூன்றாமிடத்தையும் பிடித்திருக்கின்றன.

 இதற்கு அடிப்படையாக இருப்பது, சமூக ஊடகங்கள் தொடங்கி அனைத்து இடங்களி லும்  நமது தரவுகள் அனைத்தும் பாதுகாப்பின்றி பொதுவெளியில் செல்வதும் ஒரு காரணமாகும். இதனைத் தடுத்து ஒழுங்கு படுத்திட வேண்டிய ஒன்றிய மோடி அரசு, கடந்த 10 ஆண்டுக் காலத் தில்  தனது காவி கார்ப்பரேட்  கூட்டாளிகளுக்கு மக்களின் ஒட்டு மொத்த தரவுகளையும் தாரை வார்த்தது. அது மிகப்பெரிய மோசடியாகும்.

சைபர் நிதி மோசடிகளில் அறியாமையால் சிக்குபவர்கள் சிலர்.  ஆனால் பணத்தாசையால் தெரிந்தே படுகுழியில் விழுபவர்கள் பலர்.   மோசடிகள் தொழில்நுட்பத்தோடு இணைந்தே  இயக்கப்படுவதால்  சாமானியர்களால் அவ்வளவு எளிதாகத்  தப்பிக்க முடிவதில்லை. மக்களின் விழிப்புணர்வும், அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையுமே இணையவழி குற்றங்களைக் குறைத்திட வழி.

;