உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க ஆயிரமாயிரம் சாக்கு போக்குகளைச் சொல்லி அதிமுக அரசு காலம் கடத்தியது. நீதிமன்றங் களின் தலையீட்டிற்குப் பிறகே அரைகுறையாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னமும் கூட தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைக் கூட செயல்பட விடாமல் அதிமுக அரசு தடுத்து வருகிறது. கிராமசபைக் கூட்டங்களை நடத்த அதிமுக அரசுகொரோனாவை காரணம் காட்டி தடைவிதித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி விடக்கூடாது என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி ரத்து செய்தது அதிமுக அரசு.இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை எந்த அளவுக்கு மாநில அரசு துச்சமாகமதிக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான்உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியின்றி கிராமசாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிகாரிகள் மூலம் விடப்பட்ட ரூ.2369 கோடி டெண்டர் உயர்நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஆகும். ஊராட்சி மன்றங்களின் அனுமதியில்லாமல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அலுவலர் மூலமாக கிராம சாலை மேம்பாட்டுப்பணிக்களுக்கான டெண்டரை முடிவு செய்ய முயன்றது அரசியல் அமைப்புக்கே எதிரானது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகள் முழுமையான அதிகாரம் பெற்ற மக்கள் அமைப்புகளாகும். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி அதன் அதிகாரத்தில் தலையிட முடியாது.
ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை புறக்கணித்து அதிகாரிகள் மூலம் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தற்போது உயர்நீதிமன்றத் தினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களுக்குவேண்டியவர்களுக்கு டெண்டரை வழங்கு வதற்காகவே இத்தகைய குறுக்குவழியை அதிமுக அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளில் பெருமளவு முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அடுத்தமுறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்ட நிலையில், அனைத்துத் துறைகளிலும் ஊழல், லஞ்சலாவண்ய நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபடுகின்றனர். இதற்கு ஏற்பவே அனைத்து உத்தரவுகளும் வெளியிடப்படுகின்றன.உள்ளாட்சி பிரதிநிதிகள் என்பவர்கள் வெறும் அலங்காரப் பதவியை வகிப்பவர்கள் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் மத்திய அரசின் அதிகார ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட திராணியில்லாத அதிமுக அரசு மறுபுறத்தில் உள்ளாட்சி ஜனநாயகத்தில் வெந்நீர் ஊற்றுகிறது. தங்களது ஊழலுக்கு ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளை சிதைப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கே எதிரானது ஆகும்.