இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திரமோடி கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அது இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதைமத்திய அரசு உறுதி செய்யும் என வாக்குறுதி அளித்திருந்தார். அது முற்றிலும் ஏமாற்றுவேலைஎன்பது தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் கூற்றிலிருந்து அம்பலமாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் போடப்படும் தடுப்பூசிகளில் 60 சதவிகிதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட 6 பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவை ஏதோ இன்று நேற்று உருவானதல்ல. இது கடந்த 42 வருட பழைமையான நோய் தடுப்பு திட்டம். உலகிலேயே மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டத்திற்கான கட்டமைப்பும் நம்மிடம் இருக்கிறது. இவையெல்லாம் கொரோனா போன்று பெருநோய் தொற்றுக்களில் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே ஆகும். ஆனால் அதனைக் கூட மோடி அரசு முழுமையாக பயன்படுத்த மறுத்து அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை தட்டிக்கழிப்பது பச்சைத்துரோகம். இதனை அனுமதித்தால் மோடி அரசு கொரோனாவை விட ஆபத்தான தொற்றாகமாறும் அபாயம் ஏற்படும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் உலக சராசரியை விட இந்தியாவின் சராசரி விகிதம் அதிகமாக இருக்கிறது. அதாவது 10 லட்சம் பேரில் கொரோனா பாதிப்பிற்குஉள்ளாவோரின் உலக சராசரி 5,241. இந்திய சராசரியோ 5,544 ஆகும். கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் ஆசிய சராசரி 10 லட்சம் பேருக்கு 49 பேர் ஆவர். ஆனால் இந்திய சராசரி 84. கொரோனா தொற்றுபரவல் தற்காலிகமாக குறைந்திருக்கிறது. இது மீண்டும் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தற்போதைக்கு தடுப்பு மருந்து மட்டுமேமாற்றாக முன் இருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயேஅதிகளவு நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் அரசு கணக்கில்கொள்ள வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என்பதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. பெரியம்மை தடுப்பூசி துவங்கி போலியோ சொட்டு மருந்து வரை அப்படித்தான் கொடுக்கப்படுகிறது. அதனை தகர்த்தெறிந்து தடுப்பு மருந்து தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்டாக இந்திய அரசு மாறக்கூடாது. நாடு முழுவதும்உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.