headlines

img

மூச்சுத்திணறும் தேசமும், முன்னுணராத ஆட்சியும்.....  

கொரோனா கொடுநோய் தொற்றின் இரண்டாவது அலையினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துவருகிறது. இந்த ஆபத்தை முன்னுணர்ந்து தடுப்பதில் மோடி அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. தில்லியில் கங்காராம் மருத்துவமனையில் மட்டும் வியாழனன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தில்லி மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால் மிகப் பெரும் அளவுக்கு துயர சம்பவங்கள் நடைபெறும்என அஞ்சுகிறோம். நாட்டிலுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை ராணுவம் மூலம் கையகப்படுத்தி, ஆக்சிஜன் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளுக்கு ராணுவம் பாதுகாப்பு  அளிக்க வேண்டுமென்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாதனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. ஆக்சிஜன் தயாரிக்க தங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும் என்ற அந்நிறுவனத்தின் கோரிக்கையின்மீது உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிடுகிறது. மாநில அரசு ஆலையை மீண்டும் துவக்க உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியதை உச்சநீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக மத்திய அரசு தரப்பில் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ளது.

வெள்ளியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலையை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலை நிர்வாகத்தால் ஆதரவாளர்கள் என்ற பெயரில் திரட்டப்பட்டிருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது. தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம் மோடி அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்காததே ஆகும். ஆனால் வேதாந்தா நிறுவனம் இயங்காததால் தான் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது போன்றதோற்றத்தை மத்திய ஆட்சியாளர்கள் துணையோடுவேதாந்தா முதலாளி ஏற்படுத்த முயல்கிறார். இது திசை திருப்புகிற வேலையன்றி வேறல்ல. 

உள்நாட்டில் பேராபத்து ஏற்படப்போவதை பற்றி கவலைப்படாமல் 2020-21 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் அதற்கு முந்தையநிதியாண்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக ஆக்சிஜன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் திருப்பிவிடப்பட்டது. ஏப்ரல்22 ஆம் தேதி தான் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதற்கு அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்தான் காரணமாகும். தடுப்பூசி விசயத்திலும்  ஒரே மருந்துக்கு மூன்றுவிலை நிர்ணயிக்க மத்திய அரசு தான் மருந்துஉற்பத்தி நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.கொரோனா கொடியது என்றால் அதைவிட கொடியதுமத்திய அரசின் அலட்சியமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையும் ஆகும்.

;