games

img

விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்

100 ஆண்டு பழமையான சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ள கனடாவின் தியாலோவை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சின்னர் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மேலும் இதே பிரிவில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் அமெரிக்காவின் பிரிட்ஸ், தரவரிசையில் 31ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் லோரான்சோவை 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ரைபகினா அசத்தல்

மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபகினா, தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் மெர்டன்ஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரைபகினா அபார வெற்றி பெற்று, 4ஆவது  சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசையில் 31ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் கோஸ்டிக் காயம் காரணமாக வெளியேற,  தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக் அதிர்ஷ்ட வாய்ப்புடன் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கீஸ், ரஷ்யாவின் கலின்ஸ்கயா ஆகியோரும் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினர். ஒரே நாளில் 2 இந்திய ஜோடி அவுட் ஆடவர் இரட்டையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - அமெரிக்காவின் குனைன் ஜோடி 5-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் மெலோ - ஜெர்மனியின் ஜுவரேவ் ஜோடியிடம் வீழ்ந்தது. அதே போல மற்றொரு இந்திய ஜோடியான ராமநாதன் - சந்திரசேகர் ஜோடி 3ஆவது சுற்று ஆட்டத்தில் 7-6 (7-5), 6-4 என்ற செட்  கணக்கில் பவிச் (செக்குடியசு) - மார்சிலோ (சால்வடோர்) ஜோடியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது.

மேற்கு இந்தியத் தீவுகளை வளர்த்தெடுக்க 100 முன்னேற்றங்கள் வேண்டும்

வீரர்கள் பற்றாக்குறை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக முன்னாள் சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் ஆடவர் அணி வெற்றிகளை பெற முடியாமல் மிக மோசமான அளவில் திணறி வருகிறது. இந்நிலையில், அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டின் முன்னாள் வீரர்களுடன் 2 நாள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. டிரினிடாட் நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விவ் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிளைவ் லாயிட், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், சந்தர்பால் மற்றும் தற்போதைய முதன்மை பயிற்சியாளர் டேரன் சமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி மீண்டும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல சுமார் 100 முன்னேற்றங்கள் தேவை என்றும், உள்ளூர் போட்டிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் அதிக பணத்தை ஈட்டுதல் போன்ற சிறப்பு அம்சங்களை ஆராய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், எல்லா மட்டங்களிலும் வீரர்களுக்கான வசதிகள்; பயிற்சி மைதானங்கள் செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ள னர் என தகவல்கள் வெளியாகி யுள்ளது.