மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை ரூ. 121 கோடி பரிசுத்தொகை
13ஆவது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கூட்டாக நடை பெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதில், கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடியும், 2ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடியும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ. 9.88 கோடியும் என மொத்தம் ரூ.121 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும், 144ஆவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடுக்கட்ட த்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் ஸ்ட்ரப்பை எதிர்கொண்டார். நிதான ஆட்டத்துடன் விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரிட்ஜ், தரவரி சையில் 21ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் மசாக்கை 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ரைபகினா அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் கிறிஸ்டினாவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபகினாவை, தரவரிசையில் இல்லாத செக்குடியரசின் மார்கெட்டா 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே போல தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான செக்குடியரசின் கிரெஜ்சிகோவாவும் காலிறுதிக்கு முன்னேறினார்.
கைகலப்பில் முடிந்த “லீக்ஸ் கோப்பை” இறுதி ஆட்டம் மெஸ்ஸி அணியை வீழ்த்தி சியாட்டில் சவுண்டர்ஸ் சாம்பியன்
அமெரிக்காவின் பிரபல உள்ளூர் தொடர்பாக இருப்பது “லீக்ஸ் கோப்பை” ஆகும். இந்த தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை வாஷிங்டன் நகரில் நடை பெற்றது. இறுதி ஆட்டத்தில் சியாட்டில் சவுண்டர்ஸ் - மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரியளவில் நட்சத்திர வீரர்கள் இல்லாத சியாட்டில் சவுண்டர்ஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பாதுகாப்பு வீரர்கள் முன்னிலையில் வீரர்களின் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.