இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் “குரூப் ஏ” சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டம் செப்., 14 ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை முதன்மையான காரணமாக எடுத்துக்கொண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சினேகா ராணி, அபிஷேக் வர்மா மற்றும் அனாஸ் சவுத்ரி ஆகியோர் கூட்டாக பொதுநல மனு தாக்கல் செய்தனர். மேலும் மனுவில்,”ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டி நடைபெற வுள்ளதால், அவசர வழக்காக உடனடியாக வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு,”இந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியா? அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? மனு அப்படியே இருக்கட்டும். போட்டி நடைபெறட்டும். மனுவை விசாரணைக்கு எடுக்க முடியாது” என தெரிவித்துவிட்டனர்.
பாகிஸ்தானை சமாளிக்குமா ஓமன்
17ஆவது சீசன் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய் மற்றும் அபுதாபி) நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் - ஓமன்
இடம் : துபாய் சர்வதேச மைதானம், துபாய் நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)
புரோ கபடி 2025
2ஆவது வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ்
12ஆவது சீசன் புரோ கபடி தொடரின் 3ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி - பெங்கால் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி முதல் ஆட்டத்தில் மட்டுமே தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4ஆவது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 ஆவது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.