games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023 - இடியாப்பச் சிக்கலுடன் கோப்பை வென்ற இங்கிலாந்து

கிரிக்கெட் விளையாட்டு தோன்றிய நாடும், அதிக முறை (5) உலகக்கோப்பை தொடரை நடத்திய நாடான இங்கிலாந்து முதல் உலகக்கோப்பையில் (1975) அரையிறுதியிலும், 2-வது உலகக்கோப்பையில் (1979) இறுதியில் தோல்விகண்டு கோப்பையை நழுவவிட்டது. 1983இல் நடைபெற்ற 3-வது உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய இங்கிலாந்து அணி, 4-வது (1987) மற்றும் 5-வது (1992) உலகக்கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு முறை இறுதிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அதன்பிறகு நடைபெற்ற 8 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி காலிறுதி, குரூப் சுற்றுகளோடு நடையைக் கட்டியது.  2019இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் கூட்டாக நடைபெற்ற 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் கேப்டன் இயான் மார்கன் தலைமையில் மாறுபட்ட பலத்துடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்திய இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிக்கு முன்னேறியது. 2015 சீசனில் கோப்பையை நழுவவிட்ட நியூஸிலாந்து, கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.  இங்கிலாந்து - நியூஸிலாந்து என இருஅணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அதிரடியாக விளையாட இறுதி ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரும் அனல் பறந்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆட்டம் சமனில் நிறைவு பெற்றதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. 6 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 15ரன்கள்  எடுக்க சூப்பர் ஓவரும் சமனில் நிறைவடைந்தது. அதன்பிறகு போட்டி நடுவர்கள், ஐசிசி அமைப்பாளர்கள் ஒன்று கூடி அதிக பவுண்டரி அடித்த அணிக்கு கோப்பை என வெற்றி தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தில் 26 பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 17 பவுண்டரி அடித்து இருந்த நியூஸிலாந்து அணி வித்தியாசமான விதிகளின்படி கோப்பையை இழந்தது.