73 பந்துகளில் 100 ரன்கள் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலிக்கு குவியும் பாராட்டு
13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி, 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 73 பந்துகளில் சதம் விளாசி, மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் 2ஆவது அதிவேக சதத்தை பதிவு செய்தார். அவருக்கு கிரிக்கெட் உலகில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 2017ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளின் டியான்ட்ரா 71 பந்தில் சதம் (பாகிஸ்தான்) அடித்ததே சாதனையாக இன்று வரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
