games

img

விளையாட்டு

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 காலிறுதியில் ரியல் மாட்ரிட்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிர வில் நடைபெற்ற 7ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) - ஜூவன்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. இரு அணிகளும் சரிசம பலம் கொண்ட அணி என்ற நிலையில், ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி  1-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஜூவன்டஸ் அணி தொடரைவிட்டு வெளியேறியது. தொடர்ந்து புதன்கிழமை அன்று காலை நடைபெற்ற 8ஆவது மற்றும் கடைசி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி கிளப் அணியான டார்ட்மண்ட், மெக்சிகோ கிளப் அணியான மோன்டர்ரி ஆகிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

வெள்ளிக்கிழமை முதல் காலிறுதி

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலை யில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட களைப்பை போக்க கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு வியாழனன்று விடுமுறை ஆகும்.

விம்பிள்டன் டென்னிஸ் 4:40 மணிநேர போராட்டம் ; ஜுவரேவ் அவுட்

143 ஆண்டுகால பாரம்பரிய மிக்க டென்னிஸ் தொட ரான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் 138ஆவது சீசன் (கிரா ண்ட்ஸ்லாம் ஆன பின்பு) ஜூன் 30  அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கியது. புல் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் மற்றும் அதிகளவில் பரிசுத்தொகை கொண்ட தொடரான இந்த விம்பிள்டன் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று நள்ளிரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் இல்லாத புதுமுக வீரரான பிரான்சின் ஆர்தர் ரின்டர்கினீச்சை எதிர்கொண்டார். ரின்டர்கினீச் பெரியளவில் அனு பவம் இல்லாத வீரர் என்ற நிலை யில், 7-6 (7-3), 6-7 (8-10), 6-3, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் 4:40 மணிநேர போராடி அனுபவ வீரரான ஜுவரேவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

கவுப் அதிர்ச்சி தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள  அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான உக்ரைனின் டயானாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோசமாக விளையாடிய டயானா 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் கோகா கவுபை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கோகா  கவுப் சமீபத்தில் நிறைவுப் பெற்ற பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் :  2026இல் தொடக்கம்

ஐபிஎல் போன்று உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 லீக் தொடரில் நன்றாக விளையாடிய அணிகள் மூலம்  சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2014 வரை  நடைபெற்றது. அதன்பிறகு சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் நடத்தப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடரின் மறு உருவமாக “உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடர்” 2026இல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஐபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் பிபிஎல், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ-20, இங்கிலாந்தின் “தி ஹண்ட்ரட்” என உலகெங்கிலும் உள்ள உள்ளூர் டி-20 தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட தொடர் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.