புதுதில்லி:
சக மல்யுத்த வீரரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமாரையும், அவரதுஉதவியாளரையும் தில்லி காவல்துறையினர் மே 23 ஞாயிறன்று கைது செய்தனர்.
மல்யுத்த வீரர் சாகர் ராணா தன்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. மே 4 ஆம் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் தில்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின்நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரை காவல்துறையினர் தேடினர். சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தில்லி காவல்துறையினர் அறிவித்து தேடி வந்தனர்.இந்நிலையில் நீண்ட தேடுதலுக்குப்பின் தில்லியில் பதுங்கியிருந்த சுஷில் குமாரையும், அவர் தப்பிக்க உதவி செய்த உதவியாளர் அஜய் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.