games

img

பாராலிம்பிக் : இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம்.... இந்திய வீரர்கள் பவினா பென், நிஷாத் குமார், வினோத் குமார் சாதனை....

டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பவினா பென் படேல், நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை தேடித் தந்துள்ளனர்.ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

பவினா பென் படேல்
இதில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் படேல் காலிறுதி போட்டி, மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  இறுதிச்சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங் உடன் மோதினார்.  இந்த போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 என்னும் செட் கணக்கில் தோற்கடித்தார்.இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம்பெற்றார். பாராலிம்பிக் போட்டியில் பவினா பென் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்தார். பவினாபென் படேலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பவினா படேல் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய அணிமற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துள்ளார். அவரின் அசாதாரண உறுதியும் திறமையும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அசாதாரண சாதனைக்கு என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடியின்  வாழ்த்து செய்தியில், பவினா பட்டேல் தனிச்சிறப்புக்குரிய வரலாற்றை படைத்துள்ளார். பவினா பட்டேல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வர உள்ளார். அதற்காக எனது வாழ்த்துக்கள். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

நிஷாத் குமார்
பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியும் வந்து சேர்ந்தது. உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்திய மக்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினார். டி-47 பிரிவில் பங்கேற்ற இவர் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெற்றிபெற்றார். 21 வயதான நிஷாத் குமார் அமெரிக்க வீரர் ரோட்டிரிக்குடன் மோதினார். ரோட்டிரிக் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 

வினோத் குமார்
அதைத் தொடர்ந்து வட்டு எறிதல் போட்டியில் எப்.52 பிரிவில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்று மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.41 வயதான இவர் எல்லைப் பாது காப்புப் படையில் பணியாற்றியவர்.  19.19மீட்டர் தூரம் வட்டு எறிந்து மூன்றாம் இடம்பெற்றார். இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்த போது காயமடைந்து கால்களை இழந்தவர்.இவர்கள் மூவருக்கும் நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

முதல்வர் வாழ்த்து
தமது அபார ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் வீரர்களை பாராட்டுவதில், மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.